பக்தர்கள் கெடுபிடியை அடுத்து பேஸ்புக் கணக்குகளை நோட்டமிடும் கேரள போலிஸ் 

  Newstm Desk   | Last Modified : 24 Nov, 2018 12:18 pm
after-targeting-devotees-kerala-police-now-targets-fb-users-over-sabarimala-serves-25-000-notices-mostly-to-nri-s

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மாநில அரசு கெடுபிடியை பக்தர்கள் எதிர்த்து போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில்,  25,000 பேஸ்புக் கணக்குகளை கேரள போலிஸ் கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சபரிமலையில் ஐயப்பன் சன்னிதானத்துக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதற்கு தீவிர எதிர்ப்பு கிளம்பியது. இருந்தபோதிலும் இந்த தீர்ப்பை அமல்படுத்துவதில் கேரளா அரசு மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது.

ஆனால் இந்து அமைப்புகளும் பக்தர்களும் இதற்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்க மாநில காவல்துறை பல்வேறு அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது

இதனிடையே சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்தமுறை நடந்த போராட்டத்தையடுத்து முன்னெச்சரிக்கையாக  ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு புதிய கட்டுப்பாடுகளை கேரள போலீஸார் விதித்தனர். 

கோயில் நடையை இரவு சாத்தி சாவியை ஒப்படைக்க வேண்டும், சன்னிதானத்தில் உள்ள அனைத்து கடைகளும் இரவு 10 மணிக்குள் அடைக்கப்பட வேண்டும், பக்தர்கள் யாரும் இரவு சன்னிதானத்தில் தங்கக்கூடாது என்று போலீஸார் உத்தரவு பிறப்பித்து கெடுபிடி காட்டி உயர் நீதிமன்ற கண்டனத்தையும் பெற்றது. 

இந்நிலையில், சபரிமலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தவர்களின் பெயர் மற்றும் அவர்களின் பின்னணி உள்ளிட்ட விவரங்களை கேரள போலீஸ் திரட்டி உள்ளது. அதன் ஒரு பகுதியாக 25,000க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை கண்காணித்து வருகிறது.

இது தொடர்பாக மாநில ஹைடெக் சைபர் செல், மாவட்ட சைபர் செல் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சுமார் 40 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சபரிமலை தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கருத்துக்களை பதிவிடுவதற்கும், போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பதற்கும் ஐயப்ப பக்தர்கள் பலர் சமூக வலைத்தளங்களை கருவியாக பயன்படுத்தினர். இவற்றில் பல பேஸ்புக் கணக்குகள் வெளிநாட்டில் இருந்து செயல்பட்டதாக போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

சைபர் செல் மூலம் பெறப்பட்ட தகவல்களை பேஸ்புக் அதிகாரிகளிடம ஒப்படைத்து, சம்பந்தப்பட்ட நபர்களை கண்டுபிடிப்பதற்கு போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அதன்பின்னர், அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளனர். அதாவது அந்த நபர்களின் பாஸ்போர்ட்டை முடக்கும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இதனிடையே முன்னெச்சரிக்கை என்ற பெயரில் கைது செய்யப்பட்ட பாஜக தலைவர் சுரேந்திரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதேபோல நடைபந்தலில் சரண கோஷமிட்டதற்காக கைது செய்யப்பட்ட பக்தர்கள் 69 பேரும் நீதிமன்ற உத்தரவை அடுத்து விடுவிக்கப்பட்டனர். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close