கடந்த சில நாட்கள் முன்பு, இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து, அவரது கொலைக்கு காரணமான 5 பேரை கைது செய்த போலீசார், தற்போது அவர்கள் உபயோகித்த கார் மற்றும் சிம் கார்டு இரண்டையும் கண்டுபிடித்துள்ளனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரில், இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி, நான்கு நாட்கள் முன்பு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். இதை தொடர்ந்து, இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டிருந்த போலீசார், 5 பேரை கைது செய்துள்ளதாகவும், மேலும் இருவரை கண்டுபிடிப்பதற்கான தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியிருந்தனர். இந்நிலையில், அந்த கொலையாளிகள் உபயோகித்த கார் மற்றும் சிம்கார்டு இரண்டையும் தற்போது கண்டுபிடித்துள்ளனர் உத்திரப்பிரதேச மாநில போலீசார்.
கமலேஷ் திவாரியை கொல்வதற்காக உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்புரிலிருந்து ஷாஜஹானாபாத் வரை காரில் பயணித்த கொலையாளிகள், சம்பவத்திற்கு முதல் நாள் கான்பூர் நகரில் சிம் கார்ட் ஒன்றையும் வாங்கியுள்ளனர்.
போலீசார் தேடுதல் பட்டியலில் இருக்கும் ஆஷ்ஃபாக் ஹுசைன் மற்றும் மொய்னுதீன் பதான் ஆகிய இருவரும், ஹோட்டலில் தங்கியிருந்ததை நிரூபிக்கும் விதமாக அங்குள்ள சிசிடிவியில் இருவரும் பதிவாகியுள்ளனர்.
மேலும், உத்திரப்பிரதேச மாநிலத்திலிருந்து அவர்கள் இருவரும் நேபாளம் தப்பித்து செல்லவிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மாநிலம் முழுலதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கமலேஷ் திவாரியின் கொலையை தொடர்ந்து, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில், இந்த கொலைக்கான பின்னனி என்னவாக இருக்கும் என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.
இந்நிலையில், தேடப்பட்டுக் கொண்டிருக்கும் கொலையாளிகளை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு 2.50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அம்மாநில துணை போலீஸ் அதிகாரி ஓ.பி.சிங் கூறியுள்ளார்.
Newstm.in