முன்னாள் உலக அழகியிடம் மன்னிப்பு கேட்ட திரிபுரா முதல்வர்

  Newstm Desk   | Last Modified : 28 Apr, 2018 02:05 pm


முன்னாள் உலக அழகி டயானா ஹைடன் குறித்து பேசியதற்கு திரிபுரா முதல்வர் பிப்லப் தேப் மன்னிப்பு கோரியுள்ளார். 

சமீபத்தில் திரிபுராவில் நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின்  பிப்லப் குமார் தேப் முதல்வராக பொறுப்பேற்றார். இவர் நேற்று திரிபுராவில் கைத்தறி பட்டறையின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர், "சர்வதேச நிறுவனங்கள் தங்கள் அழகு சாதனப் பொருட்களின் மீதுள்ள ஈர்ப்பை தக்க வைத்துக்கொள்ள அதிக கவனம் எடுத்துக் கொள்கின்றன.

அதற்காகவே, இந்தியாவில் இருந்து இதுவரை தொடர்ந்து ஐந்து பேரை உலக அழகி பட்டத்துக்கு தேர்வு செய்துள்ளனர். 2014ம் ஆண்டு  அழகி பட்டம் பெற்ற டயானா ஹைடன் உலக அழகி பட்டம் வென்றுள்ளார். ஆனால், அவரிடம் இந்திய அழகை நான் காணவில்லை. இந்திய பெண்கள் இயற்கையான முறையிலே தங்களது அழகை பராமரிக்கின்றனர். இந்திய இயற்கை அழகு என்றால் அது ஐஸ்வர்யா ராய் தான்” என்றார். முதல்வரின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. 

மேலும் இதுகுறித்து டயானா, "முதல்வரின் பேச்சு என்னை மிகவும் காயப்படுத்தியுள்ளது. நாம் இந்தியர்கள். இந்த பழுப்பு நிறமே எனக்கு பெருமையாக இருக்கிறது" என தெரிவித்தார்.

பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில் திரிபுரா முதல்வர் டயானாவிடம் மன்னிப்பு கோரி தனது பேசியதற்கான விளக்கத்தையும் முன்வைத்துள்ளார். அவர், "இந்த உலகத்தில் உள்ள அனைத்து பெண்களையும் நான் தாயாகவே கருதுகிறேன். கைத்தறி பொருட்கள் தற்போது நல்ல விற்பனை ஆகி வருகிறது. அதன் நிலவரம் குறித்து சொல்லவே நான் அவ்வாறு கூறினேன். இதில் யாரேனும் புண்பட்டிருந்தால் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close