வட மாநிலங்களில் புயல் எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 06 May, 2018 11:21 am

பஞ்சாப், டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்றும் மீண்டும் சூறாவளிப்புயல் தாக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களை இரண்டு தினங்களுக்குமுன், கடுமையான புழுதிப் புயல் தாக்கியது. பலத்த மழையும் கொட்டியது.

இதுவரை புயல், மழையில் சிக்கி 127பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 1,400க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் இல்லை. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பஞ்சாப், டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்றும் மீண்டும் சூறாவளிப்புயல் தாக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம், புயலில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் சில வழிகாட்டல்களையும் வெளியிட்டுள்ளது. 

வானிலையை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றும், சூறாவளிப் புயல் வீசும் என அறிவிக்கப்படும் பட்சத்தில், வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மின் சாதனங்களை அணைத்து விட வேண்டும் எனவும், பிளம்பிங், இரும்பு குழாய்களைத் தொடக்கூடாது என்றும், தகர கூரைகள், உலோக பலகைகள் உள்ள கட்டடங்களில் இருந்து வெளியேறவும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஒருவேளை சூறாவளிப் புயல் தாக்கும் பட்சத்தில் குளங்கள், ஏரிகள், மரங்கள் அருகே செல்லாமல் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கை செய்திக்குறிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close