புதுவையில் இரு தரப்பினரிடையே மோதல்; கண்ணீர் புகைக்குண்டு வீசிய போலீசார்

  Newstm Desk   | Last Modified : 08 May, 2018 12:08 pm

புதுச்சேரியில் உள்ள காலாப்பட்டு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதை அடுத்து போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். 

புதுவை, காலாப்பட்டு பகுதியில் இருக்கும் தனியார் மருந்து  தயாரிக்கும் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யக்கூடாது என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். 

இந்த தொழிற்சாலை அப்பகுதியில் இயங்கி வருவதால் நிலத்தடி நீர் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், மக்களுக்கு புற்றுநோய் வருவதாகவும் அவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் இந்த தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வது குறித்து இன்று கருத்துக் கேட்பு கூட்டம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அம்மாவட்ட ஆட்சியரும் பங்கேற்றார். 

இந்த கூட்டத்தில் ஆலை விரிவாக்கத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துக்கள் வந்தனர். மேலும் கூட்டத்தை நடத்தவிடாமல் சிலர் கோஷமிட்டதால் கூட்டத்தை பாதியில் நிறுத்திவிட்டு மாவட்ட ஆட்சியர் அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். 

அதன் பிறகு திருமண மண்டபத்தில் இருந்த இரு தரப்பினருக்கும் இடையே கருத்து  மோதல் ஏற்பட்டது. இதில் அங்கிருந்த இரண்டு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். 

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றுள்ளனர். அப்போதும் கூட்டம் கலையாமல் இருந்ததால் கண்ணீர் புகைக்குண்டு வீசி கூட்டத்தை கலைத்தனர். 

இந்த கலவரத்தில் கற்கள் வீசப்பட்டதால் போலீசார் உட்பட சிலருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் சென்னையில் இருந்து புதுவைக்கு செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் இந்த கலவரம் நடந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close