காவிரி வழக்கு: மத்திய அரசுக்கு மீண்டும் கால அவகாசம்!

  Newstm Desk   | Last Modified : 08 May, 2018 01:44 pm


காவிரி வரைவு திட்டத்தை மே 14ம் தேதி சமர்ப்பிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் 6 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளது. 

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை 6 வாரத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்த நிலையில், மத்திய அரசு அதனை நிறைவேற்றவில்லை. இதையடுத்து மே 3ம் தேதிக்குள் காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் மத்திய அரசு செயல்படுத்தவில்லை.

மே 3ம் தேதி நடந்த விசாரணையில், காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய மே 8ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அன்றைய தினம் காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்யாவிட்டால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து இன்று மீண்டும் காவிரி வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வுக்கு முன்பாக  விசாரணைக்கு வந்தது.

ஏற்கனவே ஒருமுறை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மீண்டும்  மத்திய அரசுக்கு கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் பேசுகையில், "உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு காவிரி தீர்ப்பை செயல்படுத்தாதது உச்சநீதிமன்ற அவமதிப்பு. வரைவு செயல்திட்டம் இந்நேரம் தயாராகி இருக்கவேண்டும். தீர்ப்பை அமல்படுத்துவதற்கான அமைப்பு உருவாகி இருக்க வேண்டும். இருந்தும் மத்திய அரசு தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டதையடுத்து, மே 14ம் தேதி அன்று மத்தியஅரசு காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும். அன்றைய நாளே மத்திய நீர்வளத்துறை அமைச்சர் யு.பி.சிங் நேரில் ஆஜராகி காவிரி நீர் பங்கீடு தொடர்பான மத்திய அரசின் புரிதல் குறித்தும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்க வேண்டும்" என தெரிவித்தனர். 

முன்னதாக மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், "காவிரி வரைவு திட்டம் தயாராகி விட்டது. ஆனால் பிரதமர் மத்திய அமைச்சரவையை கூட்டி அதற்கான ஒப்புதல் பெற வேண்டும். காவிரி வரைவு திட்டம் அனுப்பப்பட்ட நிலையில் தற்போது பிரதமர் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். எனவே பிரதமரின் ஒப்புதலை பெற 10 நாட்கள் கால அவகாசம் வேண்டும்" என கேட்டார்.  

தமிழக அரசு தரப்பில், 'மத்திய அரசை நம்பினால் காவிரியின் ஒரு சொட்டு நீர் கூட தமிழகத்திற்கு கிடைக்காது' என வாதம் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், இன்றைய வழக்கு விசாரணையில் தமிழகத்திற்கு கர்நாடகா வழங்க வேண்டிய 4 டிஎம்சி தண்ணீர் குறித்து எந்த வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

Advertisement:
[X] Close