தலைமை நீதிபதி வழக்கில் மனு வாபஸ்: கபில் சிபல் விளக்கம்

  Newstm Desk   | Last Modified : 08 May, 2018 04:38 pm


தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிரான மனுவை வாபஸ் பெற்றதற்கு காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் விளக்கமளித்துள்ளார். 

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்யக்கோரிய தீர்மானத்தை துணைக்கூடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்ததற்கு எதிராக காங்கிரஸ் எம்.பிக்கள் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போதே காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் மனுவை வாபஸ் பெறுவதாகக் கூறினார். இதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்ததாக 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தெரிவித்தது.    

இந்நிலையில் வழக்கு விசாரணையின் போதே திடீரென ஏன் கபில் சிபல் மனுவை வாபஸ் பெற்றார் என அனைத்து தரப்பினர் மத்தியிலும் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து கபில் சிபல் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்தார். அப்போது அவர், "தலைமை நீதிபதிக்கு எதிரான இந்த வழக்கில் முதலில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த அமர்வை ஏற்படுத்தியது யார்? அந்த ஆர்டரில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பது குறித்து எங்களுக்கு தெரிய வேண்டும். இவற்றை அறிந்த பிறகு தான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

இது நீதிமன்ற உத்தரவாக இருக்க வாய்ப்பில்லை. இதில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என உச்சநீதிமன்றம் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் நடைமுறைகள் சரியாக இருக்க வேண்டும். நீதித்துறையின் சுதந்திரத்தை நாங்கள் பாதுகாக்க விரும்புகிறோம். அதன் காரணமாகவே மனு வாபஸ் பெறப்பட்டது.

மேலும் விசாரணையின் போது எங்களது தரப்பில் கேட்கப்பட்ட 7 கேள்விகளுக்கும் நீதிபதிகள் சரியான பதிலை அளிக்கவில்லை. அரசியல் சாசன அமர்வுக்கான உத்தரவின் நகலையும் நீதிபதிகள் கொடுக்க மறுத்து விட்டனர்" என விளக்கமளித்துள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close