எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன? - அறிக்கை கேட்கும் மோடி

  Newstm Desk   | Last Modified : 08 May, 2018 03:38 pm

கடந்த 4 ஆண்டுகளில் எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தகவல்கள் தரும்படி மத்திய அமைச்சகங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். 

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஐனநாயக கூட்டணி, 2014ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஆட்சியை பிடித்தது. பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தாலும் கூட்டணி தர்மத்துக்கு கட்டுப்பட்டு கூட்டணி ஆட்சி அமைத்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வந்துள்ளன.

இருப்பினும், இந்தியாவில் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றன. இதை எதிர்கொள்ளும் வகையில், மிகத் துல்லியமான தகவலை அளிக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதையொட்டி, கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன, அதற்காக எத்தனை திட்டங்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்பவை குறித்த பட்டியலை தயாரிக்குமாறு அனைத்து துறை அமைச்சகத்துக்கும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

2014 தேர்தலில் போது 1 கோடி  பேருக்கு வேலைவாய்ப்பு அமைத்து தரப்படும் என்று பா.ஜ.க வாக்குறுதி அளித்திருந்தது. இதுவே அப்போது 30 ஆண்டுகளில் யாரும் அடையாத பெரும் வெற்றியை பா.ஜ.க அடைவதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறினர். 

2019 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மோடியின் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என யாரேனும் கூறினால் அவர்களின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் இந்த பட்டியல் இருக்கும் என்பதால் இதனை தயார் செய்ய அவர் கூறியுள்ளதாக தெரிகிறது. இந்த மாதம் 26ம் தேதியோடு பா.ஜ.க ஆட்சியமைத்து 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 

நேற்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த பேட்டியில், மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பொருளாதார கொள்கைகள் நாட்டில் பெருமளவில் வேலைவாய்ப்பை குறைத்துவிட்டதாக குற்றம்சாட்டி இருந்தது  குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close