வீட்டுக்கு சென்று சாப்பிட்டால் தலித் மக்களின் பிரச்னை தீர்ந்துவிடுமா? - பா.ஜ எம்.பி கேள்வி

  Newstm Desk   | Last Modified : 05 May, 2018 03:41 pm


தலித் மக்களின் வீடுகளுக்கு சென்று சாப்பிட்டால் மட்டும் அவர்களின் பிரச்னை தீர்ந்து விடுமா?, என பா.ஜ எம்.பி உதித் ராஜ்  கேள்வி எழுப்பியுள்ளார்.

தலித் சமூகத்தினர் வீடுகளுக்கு சென்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் உணவருந்த வேண்டும், என்ற புதிய யுக்தியை அக்கட்சி கையாண்டு வருகிறது. 

இதைத் தொடர்ந்து பல தலைவர்கள் கிராமங்களில் பிரச்சாரத்திற்க்கு செல்லும்போது, தலித் சமூகத்தினர்களின் வீடுகளுக்கு சென்று சாப்பிட்டு வருகின்றனர். ஆனால், அதில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளதை தொடர்ந்து, பா.ஜ-வின் புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், பா.ஜ-வின் இந்த பிரச்சாரத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், உ.பி அமைச்சர் சுரேஷ் ராணா, ஒரு வீட்டிற்கு சாப்பிட சென்ற போது, தானே உணவு கொண்டு வந்ததாக சர்ச்சை எழுந்தது. மத்திய அமைச்சர் உமா பாரதி, தலித் சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தின் வீட்டில் சாப்பிட இருந்த திட்டத்தை கடைசி நேரத்தில் கைவிட்டார். அதேபோல, உ.பி-யை சேர்ந்த மற்றொரு அமைச்சர் அனுபமா ஜெயிஸ்வால், "கொசுக்கடிகளையும் பொருட் படுத்தாமல்" தலித் வீடுகளுக்கு சென்று சாப்பிடுவதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். 

இந்நிலையில்,  பாரதிய ஜனதாவின் இந்த புதிய யுக்தியை, தலித் சமூகத்தை சேர்ந்த அக்கட்சியின் டெல்லி எம்.பி உதித் ராஜ் விமர்சித்துள்ளார். தலித் மக்களின் வீடுகளுக்கு சென்று சாப்பிடுவது எந்த பிரச்னைக்கும் தீர்வாகாது, என அவர் கூறினார். "கடந்த மாதம் நடைபெற்ற பாரத் பந்த்தில் தலித் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டது, தலைவர்கள் தங்கள் வீடுகளுக்கு வந்து சாப்பிட வேண்டும் என்பதற்காகவா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close