திருப்பதியை கையகப்படுத்துகிறதா மத்திய அரசு?

  Newstm Desk   | Last Modified : 06 May, 2018 11:55 pm


திருமலை திருப்பதி கோவில், இந்தியாவில் உள்ள மிகப் பழமையான கோவில்களில் ஒன்று. இந்த கோவிலை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து பாதுகாக்க மத்திய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

108 வைணவ திவ்ய தேசங்களில் மூன்றாவது இடத்தில் இருப்பது திருப்பதி. இங்கு உள்ள பழங்கால கட்டிடங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், பழங்கால கட்டடத்தை தேவஸ்தான அதிகாரிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உடைத்து மாற்றங்கள் செய்வதாகவும் மத்திய அரசுக்கு தொடர்ந்து புகார் வந்துள்ளது.  பக்தர்கள் வழங்கிய விலை மதிப்பு மிக்க காணிக்கைகள் கூட உரிய பாதுகாப்புடன் வைக்கப்படவில்லை. மேலும், மன்னர்கள், பேரரசர்கள் வழங்கிய ஆபரணங்களுக்கு பாதுகாப்பு இல்லை என மத்திய தொல்லியல் துறைக்கு புகார்கள் வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலை மத்திய அரசின் கட்டுபாட்டில் கொண்டு வரும் திட்டம் இருப்பதாகவும், அதிகாரிகள் கேட்கும் விவரங்களை தேவஸ்தானம் வழங்கி தேவையான இடங்களில் புகைப்படம் எடுக்க அனுமதித்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் திருமலை திருப்பதி அறங்காவல் குழுவுக்கு மத்திய தொல்லியல் துறை கடிதம் எழுதியுள்ளது.

தமிழர்களின் வட எல்லையாக திருமலை இருந்தது. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில், சென்னை மாகாணத்துடன் இருந்த திருப்பதியை, மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கும்போது, ஆந்திராவுக்கு அளித்துவிட்டனர். அதன்பிறகு, திருமலை திருப்பதியில் இருந்த பல அறிய தமிழ் கல்வெட்டுக்களை அழித்துவிட்டதாகவும் அதற்கு பதில் தெலுங்கு கல்வெட்டுக்களை பதிப்பதாகவும் அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்துவந்தது.

மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டுக்கு சென்றால், கோவில் பழமை மாறாமல் பாதுகாக்கப்படும். ஆனால், பக்தர்களின் வசதிக்கு ஏற்ப மாறுதல்கள் செய்ய முடியாது என்பதால் இதற்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close