காவிரி: கைவிரித்த கர்நாடக அரசு; உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

  Newstm Desk   | Last Modified : 07 May, 2018 04:43 pm


தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது என கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கில், தமிழகத்துக்கு 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த மே 3ம் தேதி உத்தரவிட்டது. மேலும், கர்நாடக அரசு, இந்த நீதிமன்ற உத்தரவை பின்பற்றாவிட்டால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது. 

ஆனால் அன்றைய நாளே கர்நாடக முதல்வர் சித்தராமையா, 'எங்களுக்கே  தண்ணீர் இல்லாதபோது எப்படி நாங்கள் தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியும்? எனவே, தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க இயலாது' என திட்டவட்டமாக தெரிவித்தார். 

நாளை(மே.8) உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இன்று(மே.7) கர்நாடக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, "மழை பற்றாக்குறையால் கர்நாடக மாநில மக்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலையில் கர்நாடகா உள்ளது. தமிழகம் கேட்டதை விட அதிகமாகவே கர்நாடக அரசு காவிரி நீரை திறந்து விட்டுள்ளது. தமிழகம் 100.4 டிஎம்சி நீர் கேட்ட நிலையில் கர்நாடகா 116.7 டிஎம்சி நீரை வழங்கியுள்ளது" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

கர்நாடகாவின் இந்த அறிக்கைக்கு தமிழக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது.அதில், "கர்நாடக அரசின் அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close