பிரதமர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு வைத்த மன்மோகன் சிங்

  Newstm Desk   | Last Modified : 08 May, 2018 09:50 am

மோடி அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி வரி விதிப்பும் மிக பெரிய பொருளாதார தவறு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.  

பெங்களூரு, குயின்ஸ் ரோடு காங்கிரஸ் கட்சி  தலைமை அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று பேட்டியளித்தார். அப்போது,  பிரதமர் மோடி கடந்த நான்கு ஆண்டுகளில் எதையும்  செய்யவில்லை. ரூ.500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டது, ஜி.எஸ்.டி வரி விதிப்பு அமல் ஆகிய இரண்டும் மிகப்பெரிய தவறாகும். 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை. அதிக வரி  விதிப்பதன் மூலம் சாதாரண மக்களுக்கு மோடி கடும் தண்டனை அளித்து வருகிறார்.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது சர்வதேச  அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தது. அதே நேரம், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைத்து விலையை கட்டுக்குள்  வைத்திருந்தோம். அப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதம் 7.8 ஆக இருந்தது. தற்போது உற்பத்தி விகிதம் 50 சதவீதம்  குறைந்துவிட்டது.

பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு காரணமாக குறு மற்றும் நடுத்தர தொழில்கள் முற்றிலும் நசுங்கிவிட்டன.  வேலைவாய்ப்பும் பறிபோய் விட்டது. ஏற்றுமதியும் குறைந்து விட்டது. வங்கி துறையிலும் அரசு தோல்வி அடைந்து விட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி  ஆட்சியின் போது 28 ஆயிரம் கோடி மட்டுமே வராக்கடன் இருந்தது. இப்போது அது ரூ.1.10 லட்சம் கோடியாக உயர்ந்து விட்டது.  பாஜக ஆட்சி அமைந்தால் ஏற்றுமதியை ஐந்து மடங்கு உயர்த்துவோம் என்றும், விவசாயிகளின் வருமானம் பல மடங்கு உயர்ந்து விடும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. மோடி தலைமையிலான கடந்த நான்கு வருடத்தில் விவசாய பொருட்களின் ஏற்றுமதி 21 சதவீதம் குறைந்துவிட்டது.

அது தவிர இறக்குமதி 60 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுதான் உண்மை. இதுபோன்ற நிலையில் விவசாயிகளின் வருவாய் உயர்த்தப்படுவது எப்படி?  பிரதமர் எதற்கெடுத்தாலும் காங்கிரஸ் அரசை குறை கூறி வருகிறார். இந்தியாவில் பசுமை புரட்சி ஏற்படுவதற்கு யார் காரணம்? என்பதை பிரதமர்  முதலில் அறிந்து கொள்ளவேண்டும். தகவல் அறியும் சட்டம், கல்வி உரிமை சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், மகாத்மா காந்தி கிராம வேலைவாய்ப்பு  திட்டம் போன்றவையும் ஐக்கிய முற்போக்கு  கூட்டணி அரசின் சாதனை. ஆண்டுதோறும் 2 கோடி புதிய வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என மோடி அறிவித்தார்.  ஆனால், அதற்கு பதிலாக தவறான பொருளாதார கொள்கை காரணமாக 72 லட்சம் வேலைகள் குறைந்துள்ளன என்றார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close