நோபல் பரிசை திருப்பி அளித்தார் ரவீந்திரநாத் தாகூர்; திரிபுரா முதல்வரின் அடுத்த சர்ச்சை

  Newstm Desk   | Last Modified : 11 May, 2018 12:29 pm


ஆங்கிலேயரைஎதிர்க்கும் நோக்கில் தனக்கு அளித்த நோபல் பரிசை ரவீந்திரநாத் தாகூர் திருப்பி அளித்தார் எனப் பேசி திரிபுரா முதல்வர் அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளார். 

பல்வேறு கருத்துக்களை கூறி சர்ச்சைகளில் சிக்கி வரும் பா.ஜ.கவினர் வரிசையில்  திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப்-ம் இணைந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் திரிபுராவில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.கவைச் சேர்ந்த பிப்லாப் கடந்த மார்ச் 9ம் தேதி திரிபுரா முதல்வராக பொறுப்பேற்றார். இதையடுத்து விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசிவரும் அவர் தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறார். 

உதய்பூரில் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள் விழாவில் பேசிய பிப்லாப், பிரிட்டிஷ் காலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து தனக்கு அளித்த நோபல் பரிசை தாகூர் திருப்பி அளித்தார் எனக்கூறினார். தாகூருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு 1913. மேலும் அவர் 1919ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிரான போராட்டம் நடந்த சமயத்தில் தான் தனக்கு அளித்த நைட்குட்(Knighthood) பட்டத்தை தான் அவர் திருப்பி அளித்துள்ளார். இதனால் பிப்லாப்-இன் பேச்சு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

முன்னதாக இவர், மகாபாரத காலத்திலேயே இன்டர்நெட் இருந்தது என கூறி சர்ச்சையில் சிக்கினார், அடுத்ததாக, 'அழகு என்றாலே ஐஸ்வர்யா ராய் தான், அவரை ஒப்பிடுகையில்  டயானா ஹைடென் உலக அழகி பட்டத்திற்கு தகுதி இல்லை' என பேசினார். பின்னர் இதற்கு டயானா வருத்தம் தெரிவித்ததையடுத்து, பிப்லாப் மன்னிப்பு கோரினார். தொடர்ந்து, 'மெக்கானிக்கல் என்ஜினீயர்கள் படிப்பு முடிந்ததும் சிவில் சர்வீஸ்களுக்கு வரக்கூடாது, மாற்றாக சிவில் என்ஜினீயர்கள் சிவில் சர்வீஸ்-க்கு வரலாம்' என கூறினார். இதுபோன்ற சர்ச்சைகளையடுத்து பா.ஜ.க தலைமையகம் பிப்லாப்-யை அழைத்து எச்சரித்தும் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார் பிப்லாப் தேப்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close