உன்னாவ் வழக்கு: பா.ஜ.க எம்.எல்.ஏ மீதான குற்றத்தை உறுதி செய்தது சி.பி.ஐ

  Newstm Desk   | Last Modified : 11 May, 2018 12:18 pm

உன்னாவ் பகுதியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில், பா.ஜ.க எம்.எல்.ஏ மீதான குற்றச்சாட்டை உறுதி செய்துள்ளது சி.பி.ஐ.

உத்தரபிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் கடந்த ஆண்டு, பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் பின் அந்த பெண் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் வீட்டின் முன்பு இரண்டு மாதங்களுக்கு முன்பு தீக்குளிக்க முயன்றார். அதற்கு பிறகு இந்த சம்பவத்தின் மீது அனைவரது கவனமும் திரும்பியது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் தந்தையை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். 

இந்த சம்பவத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ குற்றவாளி என்று பலரும் கூறினர். அவரை கைது செய்ய வேண்டும் என்று பல போராட்டங்களும் நடந்தன. அதனையடுத்து அலகாபாத் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து, குற்றம் சாட்டப்பட்டவர் ஏன் கைது செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பியது. அதைத்தொடர்ந்து பா.ஜ.க எம்.எல்.ஏவை போலீசார் கைது செய்தனர். 

பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. கடந்த ஓரு மாதமாக சி.பி.ஐ போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் பா.ஜ.க எம்.எல்.ஏ மீதான குற்றசாட்டை தற்போது சி.பி.ஐ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த வழக்கில் அவரை காப்பாற்ற போலீசார் முயன்று எப்.ஐ.ஆரில் அவரின் பெயரை சேர்க்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப தாமதப்படுத்தியும், உடைகளை தடவியல் பரிசோதனைக்கு கொடுக்காமலும் போலீசார் அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close