மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தல்; பல்வேறு இடங்களில் வன்முறை; 6 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 14 May, 2018 03:16 pm


மேற்கு வங்கத்தில் இன்றைய பஞ்சாயத்து தேர்தல் வாக்குபதிவின் போது வன்முறை வெடித்துள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு கட்ட எதிர்ப்புகள், போராட்டங்களுக்கு பிறகு இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. சுமார் 58,000 இடங்கள் உள்ள அம்மாநிலத்தில் இன்று தோராயமாக 38,600 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 34.2% இடங்களில் யாரும் போட்டியிடாததால் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக பஞ்சாயத்து தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கலின் போதே, ஆளும் கட்சியினர் எதிர்கட்சியினரை தாக்கியதாக புகார் எழுந்தது. இதனால் இன்று தேர்தல் நடைபெறுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மற்ற மாநில போலீசாரை சேர்த்து சுமார் 46,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து இன்று தேர்தல் தொடங்கிய இரண்டு மணி நேரத்திலேயே பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. அதன்படி,  வடக்கு 24 பர்கானஸ், தெற்கு  24 பர்கானஸ் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். 

திரிணாமூல் கட்சியைச் சேர்ந்த இரண்டு ஆதரவாளர்கள், பா.ஜ.கவின் ஒரு ஆதரவாளர், ஒரு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர், சுயேட்சை கட்சியைச் சேர்ந்த ஒருவர் என 6 பேர் உயிரிழந்தனர். மரணமடைந்த 6வது நபர் யார் என இன்னும் தெரியவில்லை. மேலும் வேட்பாளர் உள்பட 20க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

கலவரத்தில் கார்கள், பைக்குகள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. கலவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close