• இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜீத் வடேகர் மரணம்
  • வாஜ்பாய் கவலைக்கிடம்... தலைவர்கள் எய்ம்ஸ் வருகை
  • பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
  • நிலக்கரி இறக்குமதி முறைகெடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை - ஸ்டாலின் வலியுறுத்தல்
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக உயர்வு

கர்நாடக தேர்தலுக்காக பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு லீவ்: சிதம்பரம் கிண்டல்

  Sujatha   | Last Modified : 15 May, 2018 07:42 am


கர்நாடக தேர்தலுக்காக பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு இடைவேளை விட்டிருந்தது. இப்போது தேர்தல் முடிந்ததை தொடர்ந்து, மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி இருக்கிறது  என்று ப.சிதம்பரம்  கிண்டலடித்துள்ளார்.  

இதுகுறித்து முன்னாள் நிதி அமைச்சர்  ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “நாம் பழைய நிலைக்கு மீண்டும் செல்கிறோம். தற்போது கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்துவிட்டதால் டீசல், பெட்ரோல் மீது அதிக வரி விதிக்கப்பட்டு உள்ளது. நுகர்வோர் மீது சுமை ஏற்றப்பட்டு இருக்கிறது. கர்நாடக தேர்தலுக்காக பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இடைவேளை விடப்பட்டு இருந்தது” என்று கிண்டலாக குறிப்பிட்டார். 

முன்னதாக, பெட்ரோல், டீசல் விலையானது தினசரி மாற்றம் அடைந்து வந்திருந்தது. கடந்த மாதம் 24-ந்தேதிக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த 12-ந்தேதி கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் முடிந்த சூட்டோடு சூடாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று மீண்டும் கடுமையாக உயர்த்தின. நகரங்களுக்கு ஏற்ப பெட்ரோல் விலை 17 மற்றும் 18 காசுகள் விலை உயர்த்தப்பட்டது.


சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.61க்கு விற்பனை செய்யப்பட்டது. 20 நாட்களுக்கு முந்தை விலை ரூ.77.43 ஆக இருந்தது. அதாவது சென்னையில் லிட்டருக்கு 18 காசுகள் அதிகரித்தது. 

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்று ரூ.74.80 (முந்தைய விலை  ரூ.74.63).  

கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.50 ஆகவும்(முந்தைய விலை ரூ.77.32) 

மும்பையில் ரூ.82.65 ஆகவும் (முந்தைய விலை ரூ.82.48) இருந்தது.


இதேபோல் டீசல் விலையும் கடுமையாக உயர்த்தப்பட்டது. 

டெல்லியில் நேற்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.66.14 (முந்தைய விலை  ரூ.65.93)

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.69.79 (முந்தைய விலை ரூ.69.56)

மும்பையில் நேற்று டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.43 ஆகவும்(முந்தைய விலை ரூ.70.20)

கொல்கத்தாவில் ரூ.68.68 ஆகவும்(முந்தைய விலை ரூ.68.63) இருந்தது.

சென்னையை பொறுத்தவரை தினசரி விலை மாற்றம் கொண்டு வரப்பட்ட கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி, ஒரு லிட்டர் பெட்ரோல் 65 ரூபாய் 46 காசுகளும், ஒரு லிட்டர் டீசல் 56 ரூபாய் 13 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால், அன்றிலிருந்து நேற்று வரை ஒரு லிட்டர் பெட்ரோல் 12 ரூபாய் 15 காசுகளும், ஒரு லிட்டர் டீசல் 13 ரூபாய் 66 காசுகளும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
[X] Close