பா.ஜ.கவுடன் இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை: குமாரசாமி

  Newstm Desk   | Last Modified : 16 May, 2018 11:42 am

காங்கிரசுடன் மட்டும்தான் கூட்டணி, பா.ஜ.க உடன் இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று குமாரசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு 104 இடங்களும், காங்கிரசுக்கு 78 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 37 இடங்களும் கிடைத்துள்ளன.

மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 3 இடங்களைப் பிடித்துள்ளனர். ஆட்சி அமைக்கத் தேவையான 113 இடங்கள் இல்லாத நிலையிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று பா.ஜ.கவின் முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் கடிதம் அளித்துள்ளார்.

அதே நேரம் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் வகையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமியும் ஆளுநரை சந்தித்து தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதால் ஆட்சி அமைக்க அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது யாரை ஆட்சி அமைக்க அழைப்பது என முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளுநரின் கையில் இருக்கிறது.

இந்த நிலையில் இன்று, புதிதாக தேர்வான காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. ஆனால் இந்த கூட்டத்தில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை.

இதேபோன்று பா.ஜ.க எம்.எல்.ஏக்களின் ஆலோசனை கூட்டமும் எடியூரப்பா தலைமையில் நடைபெறுகிறது. மேலும், ஆளுநர் யாரை ஆட்சி அமைக்க அழைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பெங்களூருவில் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க வந்த குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ''நாங்கள் காங்கிரசுடன் இணைந்து கூட்டணி அமைக்க முன்னரே முடிவு செய்துவிட்டோம். அதற்காக தான் தற்போது எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்க உள்ளது. இந்தகூட்டத்தில் வேறு எந்த முடிவும் எடுக்கப்படாது. நான் தான் கர்நாடக முதல்வராக பொறுப்பேற்பேன். பா.ஜ.க உடன் இணைந்து ஆட்சி அமைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை'' என்று திட்டவட்டமாக கூறினார்.

இந்த கூட்டத்தில் அக்கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை.

முன்னதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குமாரசாமியை சந்தித்து பா.ஜ.கவுக்கு ஆதரவு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close