தகுந்த நேரத்தில் ஆட்சி அமைக்க அழைப்பேன்: எடியூரப்பாவுக்கு ஆளுநர் பதில்

  Newstm Desk   | Last Modified : 16 May, 2018 12:29 pm


தகுந்த நேரத்தில் கர்நாடகாவில் ஆட்சி அமைக்க அழைப்பேன் என தனக்கு ஆளுநர் பதிலளித்ததாக எடியூரப்பா தெரிவித்தார். 

கர்நாடகாவில் பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களில் பா.ஜ.க 104 இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டு வருகிறது. நேற்று மாலை ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து எடியூரப்பா, ஆட்சி அமைக்க தன்னை அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அதைத்தொடர்ந்து, இன்று  105 எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்ட கடிதத்துடன் சென்று அவர், ஆட்சியமைக்க பா.ஜ.கவுக்கு அழைப்புவிடுக்க வேண்டும் என்று மீண்டும் ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளார். எடியூரப்பாவுடன் ஈஸ்வரப்பா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களும் சென்றனர். இதையடுத்து, தனது கடிதத்தை ஆளுநர் பரிசீலித்து தகுந்த நேரத்தில் ஆட்சியமைக்க அழைப்பேன் என உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார். 

மேலும், இன்றைய பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கர்நாடக சட்டமன்ற தலைவராக எடியூரப்பா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்பின்னரே எடியூரப்பா, ஆளுநரை சந்தித்துள்ளார். ஆளுநரை சந்தித்து விட்டு வெளியே வந்தபோது பா.ஜ.கவினர் சிரித்த முகத்துடன் வந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோன்று நாளை எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மற்றொரு பக்கம் காங்கிரஸ் -ம.ஜ.த கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் நேற்றைய வாக்கு எண்ணிக்கை முடிவில் பா.ஜ.க - 104 காங்கிரஸ் -78, மதச்சார்பற்ற ஜனதா தளம் -37, சுயேச்சை -3 இடங்கள் பெற்றுள்ளன. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close