எங்கள் எம்.எல்.ஏக்களிடம் ரூ.100 கோடி பேரம் பேசுகிறது பா.ஜ.க: குமாரசாமி குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 16 May, 2018 01:31 pm

மதசார்பற்ற ஜனதா தள கட்சி எம்.எல்.ஏக்களுக்கு ரூ100 கோடியும், அமைச்சர் பதவியும் தருவதாக பா.ஜ.க கூறியதாக குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மதசார்பற்ற ஜனதா தளத்தின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் நடந்தது. இதில் 12 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

அந்த கூட்டத்தில் குமாரசாமி அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவர் தனது கட்சி நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, ''நாங்கள் பா.ஜ.கவிற்கு ஆதரவு அளிக்கமாட்டோம். எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி. பா.ஜ.க கர்நாடகாவை ஆள்வது மக்களுக்கு பிடிக்கவில்லை. பா.ஜ.க 80 சீட்டுகளைக்கூட பிடிக்காது என்று நினைத்தேன். 

தேர்தல் முடிவுகள் சரியானதாக எனக்கு தெரியவில்லை. பிரிவினை அரசியல் செய்ததால் தான் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. தற்போது பா.ஜ.க கர்நாடகாவில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று நினைக்கிறது. நானும் என் கட்சியும் பதவி பசி இல்லாதவர்கள். 

ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை எங்களிடம் உள்ளது. எங்கள் எம்.எல்.ஏக்களுக்கு ரூ.100 கோடியும் அமைச்சர் பதவியும் தருவதாக பா.ஜ.கவினர் ஆசைக்காட்டுகின்றனர். அந்த பணம் எங்கிருந்து வருகிறது. வருமான வரித்துறை தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறது? அது மக்களின் பணம். 

காங்கிரசும், பா.ஜ.கவும் என்னிடம் கூட்டணிக்காக பேசினர். ஆனால் 2004 மற்றும் 2005ல் பா.ஜ.கவுடன் இணைந்தது எனது தந்தை பெயருக்கு பெரும் களங்கமாக மாறியது. அந்த தவறை நான் மீண்டும் செய்ய மாட்டேன். கடவுள் எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளார். எனவே இந்த முறை காங்கிரசுடன் இணைந்து பணியாற்ற உள்ளேன். 

ஆட்சி அமைக்க காங்கிரஸ் கொடுத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் முதல்வர் பதவியை கேட்கவில்லை காங்கிரஸ் தான் இந்த கூட்டணி அமைந்தால் நான் முதல்வராக பொறுப்பேற்கலாம் என்று கூறியது. 

குதிரை பேரம் நடத்தி ஆட்சியை பிடிக்க நினைக்கும் பா.ஜ.கவிற்கு ஒன்றை கூற விரும்புகிறேன். எங்கள் கட்சியில் இருந்து ஒரு எம்.எல்.ஏவை பிரிக்க நினைத்தால் உங்கள் கட்சியில் இருந்து 2 பேரை நாங்கள் பிரிப்போம். நாங்கள் மீண்டும் கவர்னரை சந்திக்க உள்ளோம். 

பா.ஜ.க சார்பில் இருந்து அமைச்சர் ஜவடேகரோ அல்லது மற்றவர்களோ என்னை சந்திக்கவில்லை" என்றார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close