தேர்வில் தோல்வி: விருந்து வைத்து கொண்டாடிய பலே தந்தை!

  Padmapriya   | Last Modified : 16 May, 2018 03:38 pm

மத்திய பிரதேசத்தில், பொதுத் தேர்வில் மகன் தோல்வியடைந்ததை, தந்தை பந்தல் போட்டு வெடிவெடித்து விருந்து வைத்து கொண்டாடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள டிலி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுரேந்திரகுமார் வியாஸ். கட்டிட காண்டிராக்டரான இவரது மகன் அன்ஸு இந்தாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தார். இதன் முடிவுகள் நேற்று காலை வெளியாகின. அதில், அன்ஸு தேர்ச்சி பெறவில்லை. வேதனையடைந்த அன்ஸு,  இது குறித்து தனது தந்தையிடம் எப்படித் தெரிவிப்பது என்று தவித்து இருந்தார். 

கவலையுடன் தனது தந்தையை சந்திக்க அன்ஸுவுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. மகனின் தோல்வி குறித்து சுரேந்திரகுமார் எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தவில்லை. மேலும் தேர்வில் தோல்வியடைந்த மகனுக்கு இனிப்புகளை ஊட்டி, தட்டித் தேற்றினார். அது மட்டுமல்லாமல், மகனின் தோல்வியை கொண்டாட முடிவு செய்து, அன்ஸுவுடன் படித்த மாணவர்கள், பக்கத்து வீட்டினர், உறவினர்கள் என பலரையும் தனது வீட்டுக்கு அழைத்தார். டிஜே ஏற்பாடு செய்து, இனிப்பு வழங்கி பலமான விருந்தும் அளித்தார். 

மகன் தேர்வில் தோல்வியடைந்ததற்கு கொஞ்சம்கூட வருத்தப்படாமல் சுரேந்திரகுமார் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து சம்பவம் அங்குள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியது. இதனால் தொலைக்காட்சியின் பார்வை சுரேந்திரகுமார் வீடு பக்கம் திரும்பியது. இதுகுறித்து சுரேந்திரகுமார் கூறுகையில், "தேர்வுக்காக எனது மகன் கடுமையாக உழைத்தான். சிறப்பாக எழுதினான். ஆனாலும், தோல்வி அடைந்து இருக்கிறான். அவனது தோல்வியை நான் பெரிய வி‌ஷயமாக எடுத்து கொள்ளவில்லை. அதே நேரத்தில், தேர்வுக்காக கடினமாக உழைத்த அவனை இன்னும் உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்தேன். 

மேலும் தேர்வில் தோல்வி அடையும் அனைத்து மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் நான் ஒரு வி‌ஷயத்தை சொல்லி கொள்ள விரும்புகிறேன். பள்ளியில் நடைபெறும் தேர்வு என்பது மாணவரின் கடைசி தேர்வு அல்ல. வாழ்க்கையில் தொடர்ந்து எத்தனையோ சந்தர்ப்பங்கள் வந்து கொண்டே இருக்கும். அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். முடிந்ததை நினைத்து கவலைப்படக் கூடாது" என்றார். 

தந்தையின் செயல் குறித்து அன்ஸு  கூறுகையில், "எனது தந்தை அனைவருக்கும் விருந்து அளித்து என்னை ஊக்கப்படுத்தியுள்ளார். இதனால் அடுத்த ஆண்டு தேர்வில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன்" என்றார்.

தேர்வு முடிவு நாள் அன்று மாணவர்கள் மன வருத்தத்தால் தவறான முடிவுகளை எடுக்கும் செய்திகளை மட்டுமே கேட்க முடிந்த நிலையில், அன்ஸுவின் தந்தை நேர்மறை சிந்தனையோடு, அடுத்தத் தேர்வுக்கு ஊக்கப்படுத்தி இருக்கும் விதம் அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close