எம்.எல்.ஏக்கள் கடிதங்களை நாளை சமர்பிக்க எடியூரப்பாவுக்கு உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 17 May, 2018 10:29 am

கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்க அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், ஆளுநர் முடிவை தடுக்க முடியாது என்ற உச்ச நீதிமன்றம், எம்.எல்.ஏக்கள் அளித்த ஆதரவு கடிதங்களை நாளை சமர்பிக்க உத்தரவிட்டது. 

கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவில், பா.ஜ.க 104, காங்கிரஸ் 78, மஜத 37 தொகுதிகளை வென்றன. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவைப்படும் நிலையில், பா.ஜ.க ஆட்சியமைப்பதை தடுக்க, காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கூட்டணி சேர்ந்தன. மஜத-வின் குமாரசுவாமி முதல்வராக பதவியேற்க முடிவு செய்து இரு கட்சிகளும் சேர்ந்து ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரின. 

அதேநேரம், தனிப்பெரும் கட்சியான பா.ஜ.க-வும் எடியூரப்பா ஆட்சியமைக்க உரிமை கோரியது. இந்நிலையில், எடியூரப்பா ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆளுநரும் பா.ஜ.க கட்சியை சேர்ந்தவர் என்பதால், அவரது இந்த முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடுத்தது. இன்று காலை 9 மணிக்கு எடியூரப்பா பதவியேற்க இருந்த நிலையில், அவசர வழக்காக நள்ளிரவு உச்ச நீதிமன்றம் விசாரித்தது. 

அப்போது, எடியூரப்பா முதல்வரானால், அது எம்.எல்.ஏ.க்கள் அணி தாவுவதற்கு வழி வகுக்கும் என்றும், இது ஜனநாயகத்தை கெடுக்கும் செயல் என்றும் காங்கிரஸ் தரப்பில் வாதிடப்பட்டது. ஆளுநர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட 3 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், ஆளுநர் உத்தரவு குறித்து கேள்வி எழுப்ப நீதிமன்றத்திற்கு முகாந்திரம் இல்லை என கூறினர். ஆளுநரை கேள்வி எழுப்ப முடியாத நிலையில், அவரது முடிவை தடுக்க முடியாது எனவும் கூறியுள்ளனர். இதனால், எடியூரப்பா பதவியேற்பதில் தடையில்லை என தெரிவித்துள்ளனர். ஆனால், ஆளுநரிடம் பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பா  சமர்ப்பிக்கும்  எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை, தங்கள் முன் நாளை அவர் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். மேலும், பதவி ஏற்பு உள்ளிட்ட அனைத்தும் நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு உட்பட்டதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே கர்நாடகாவில் பா.ஜ.க தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் பா.ஜ.க தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்வதன் மூலம், தானாகவே பா.ஜ.க பொரும்பான்மை பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close