• இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜீத் வடேகர் மரணம்
  • வாஜ்பாய் கவலைக்கிடம்... தலைவர்கள் எய்ம்ஸ் வருகை
  • பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
  • நிலக்கரி இறக்குமதி முறைகெடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை - ஸ்டாலின் வலியுறுத்தல்
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக உயர்வு

கர்நாடக சட்டபேரவை வாயிலில் காங்கிரஸ் தர்ணா!

  Newstm Desk   | Last Modified : 17 May, 2018 10:40 am

எடியூரப்பா முதல்வராக பதவியேற்றதை எதிர்த்து முன்னாள் முதல்வர் சித்தராமையா உட்பட காங்கிரஸ் தலைவர்கள் கருப்பு பட்டை அணிந்து சட்டபேரவை வாயிலில் உள்ள காந்தி சிலை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. பா.ஜ.க 104 தொகுதிகளில் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற ம.ஜ.த உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. பெரும்பான்மை பலம் உள்ள தங்களை தவிர்த்து, பா.ஜ.கவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று காங்கிரஸ் ஏற்கனவே கூறியிருந்தது.

இதையொட்டி பா.ஜ.கவைச் சேர்ந்த எடியூரப்பாவை முதல்வராக பதவியேற்கும்படி, கர்நாடகா ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை அவசர வழக்காக விசாரித்த உச்ச நீதிமன்றம் எடியூரப்பா பதவியேற்புக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் கடிதங்களை நாளை காலை 10 மணிக்குள் எடியூரப்பா தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்று காலை எடியூரப்பாவின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கர்நாடக சட்டப்பேரவை முன்பு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கருப்பு பட்டை அணிந்து தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பா பதவியேற்று உள்ளதாக கூறி அவர்கள் தெரிவித்தனர். குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதே வேளையில் எடியூரப்பா கர்நாடகாவின் 23வது முதல்வராக பதவியேற்று சட்டப்பேரவைக்குள் சென்றார். 

மேலும், ஈகிள்டன் விடுதியில் தங்கியுள்ள காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் எம்.எல்.ஏக்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement:
[X] Close