கர்நாடகாவில் விவசாயக்கடன் தள்ளுபடி: எடியூரப்பாவின் முதல் அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 17 May, 2018 01:52 pm


கர்நாடகாவில் முதல்வராக பதவியேற்ற பிறகு, விவசாயக்கடன் தள்ளுபடிக்கான ஆணையில் எடியூரப்பா கையெழுத்திட்டுள்ளார். 

கர்நாடக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை இல்லாத நிலையில், தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்ட கடிதத்தை அம்மாநில ஆளுநரிடம் எடியூரப்பா அளித்தார். அதையடுத்து, ஆளுநரும் அவரை ஆட்சி அமைக்க அழைத்தார். பெரும்பான்மை இல்லாத பா.ஜ.க ஆட்சி அமைப்பது ஜனநாயகத்தை கெடுக்கும் செயல் எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர் மனு அளித்தார்.

மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கூறிய நிலையில், நள்ளிரவு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் ஆளுநரின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க முடியாது எனக்கூறி எடியூரப்பா முதல்வராக பதவியேற்க தடையில்லை என உத்தரவிட்டது, மேலும் எடியூரப்பா சட்டப்பேரவையில் 15 நாட்களுக்குள்ளாக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதையடுத்து, முதல்வராக பதவியேற்ற பிறகு விவசாயக்கடன் தள்ளுபடிக்கான முதல் ஆணையில் அவர் கையெழுத்திட்டுள்ளார். 1 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, முதல் வாக்குறுதியை பா.ஜ.க நிறைவேற்றியுள்ளது.

முன்னதாக காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த இணைந்து கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்திருந்தன. ம.ஜ.தவின் குமாரசுவாமி முதல்வராக பதவியேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆளுநர், ஆட்சி அமைக்க பா.ஜ.கவை அழைக்க, காங்கிரஸ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close