கர்நாடகாவைப் போல எங்களை அழையுங்கள்... கோவா, பீகாரில் கட்சிகள் போர்க்கொடி!

  Newstm Desk   | Last Modified : 17 May, 2018 04:59 pm


கர்நாடக ஆளுநரைப் போல, கோவாவில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த காங்கிரஸ் கட்சியை, ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநரிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுக்க உள்ளது. இதற்காக கோவாவில் நாளை காங்கிரஸ் தரப்பில் பேரணி நடத்தப்படவுள்ளது. 

கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத, தனிப்பெரும் கட்சியினை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, பெரும்பான்மைக்குத் தேவையான 113 தொகுதிகளில் 104 இடங்களையே கைப்பற்றிய பா.ஜ.கவின் எடியூரப்பா இன்று காலை முதல்வராகவும் பதவியேற்றுவிட்டார். ஆனால் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி பெரும்பான்மை வைத்திருந்தும் அவர்களை ஆளுநர் அழைக்கவில்லை. 

இதையடுத்து கோவாவில் தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் நாளை உரிமை கோர உள்ளது. கடந்த 2017 மார்ச் மாதம் நடந்த கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களையும், பா.ஜ.க 13 இடங்களையும் கைப்பற்றியது. மிக வேகமாக செயல்பட்ட பா.ஜ.க, தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. காங்கிரஸ் கட்சியும் உரிமை கோரியது. ஆனால், போதுமான எம்.எல்.ஏ-க்கள் இல்லை என்று கூறி காங்கிரஸை நிராகரித்த அம்மாநில ஆளுநர், பா.ஜ.க-வை ஆட்சி அமைக்க அழைத்தார். 

கர்நாடகாவில் பா.ஜ.க-வை ஆட்சி அமைக்க அழைத்த ஆளுநரின் செயல்பாட்டை பின்பற்றி, கோவாவிலும் காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதற்காக கோவாவில் நாளை காங்கிரஸ் தரப்பில் பேரணி நடத்தப்பட உள்ளது.


அதேபோன்று பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் 80 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் ஆளுநரோ, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது என்று கூறி, நிதிஷ் குமாரை ஆட்சி அமைக்க அழைத்தார். தற்போது, கர்நாடக ஆளுநர் முடிவை பின்பற்றி தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் போர்க்கொடி உயர்த்தி உள்ளது. இதேபோல், மணிப்பூர் உள்ளிட்ட இதர மாநிலங்களிலும் பா.ஜ.க-வுக்கு எதிராக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த காங்கிரஸ் கட்சி போராட்டங்களில் இறங்க திட்டமிட்டு வருகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close