ரிசார்ட்டை காலி செய்த எம்.எல்.ஏக்கள்; ரகசிய இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்

Last Modified : 18 May, 2018 09:26 am

மைசூரி ரிசார்ட்டில் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதால் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் ரகசிய இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். 

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில், 222 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றதில், அதிகபட்சமாக பாஜகவுக்கு 104 இடங்கள் கிடைத்தன. காங்கிரசுக்கு 78 இடங்களும், மஜதவுக்கு 37 இடங்களும் கிடைத்தன.

தேர்தலுக்கு பிறகு 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆனால் தனிப்பட்ட முறையில் அதிக இடங்களை கைப்பற்றிய பாஜகவுக்கு, ஆட்சி அமைக்க வருமாறு கர்நாடகா ஆளுநர் அழைப்பு விடுத்தார். 

அதை ஏற்று கர்நாடகத்தின் புதிய முதல்வராக பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா நேற்று பதவி ஏற்றார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் வழங்கி இருக்கிறார்.

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. ஏற்கனவே பாஜகவுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் இன்னும் 7 பேரின் ஆதரவுதான் அந்த கட்சிக்கு தேவைப்படுகிறது. இந்த ஆதரவை எளிதில் திரட்டிவிட முடியும் என்று அக்கட்சி நம்புகிறது.

இதற்காக காங்கிரஸ், ம.ஜ.த எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசி பாஜக இழுப்பதை தடுக்க அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு பெங்களூரு அருகே உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். 

எடியூரப்பா முதல்வராக நேற்று பதவி ஏற்றதை தொடர்ந்து, அந்த சொகுசு விடுதிக்கு போடப்பட்டு இருந்த போலீஸ் பாதுகாப்பு திடீரென்று வாபஸ் பெறப்பட்டது. இதற்கு காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை என்று அவர்கள் கூறினர். 

இதன் காரணமாக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சிறப்பு விமானம் மூலம் கேரளா அழைத்துச்செல்ல காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. ஆனால் அவர்கள் விமானத்தில் செல்ல விமான போக்குவரத்து இயக்ககம் அனுமதி மறுத்துவிட்டது. 

எனவே காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மைசூருவில் உள்ள சொகுசு விடுதியில் இருந்து இரவோடு இரவாக பேருந்துகளில் பயணமானார்கள். அவர்கள் புதுச்சேரி, கொச்சி மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு சென்றிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close