நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு: உச்சநீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 18 May, 2018 01:03 pm

கர்நாடகா சட்டசபையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கர்நாடக தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எஸ். பாப்தே, அசோக் பூஷன் அடங்கிய அமர்வு, 3 மணிநேரம் காரசார விவாதத்திற்கு பிறகு எடியூரப்பா பதவியேற்க தடையில்லை என உத்தரவிட்டனர். மேலும், மே 15ந்தேதி ஆட்சி அமைக்க உரிமை கோரி எடியூரப்பா ஆளுநருக்கு எழுதிய கடிதத்தை இன்று காலை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். நேற்று எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். அதனை எதிர்த்து காங்கிரஸ் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது. 

இந்நிலையில் இன்று எடியூரப்பாவை ஆளுநர் ஆட்சிமைக்க அழைத்ததற்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எஸ். பாப்தே, அசோக் பூஷன் முன்பு வந்தது.


இதில் ஆளூநரிடன் ஆட்சியமைக்க கோரி எடியூரப்பா கொடுத்த கடிதம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த கடிதத்தில, ''ஆட்சியமைக்க தம்மை அழைத்தால் பெரும்பான்மையை நிரூபிப்பேன்'' என்று எடியூரப்பா குறிபிட்டுள்ளார். 

அப்போது, கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சியமைக்க எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது என்று பா.ஜ.க வழக்கறிஞர் முகுள் ரோஹித்கி தெரிவித்தார்.

பின்னர், "பெரும்பான்மை இருப்பதாக காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கூறிய நிலையில் பா.ஜ.கவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தது ஏன்? நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் நல்லது என்று தோன்றுகிறது. நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பா தயாரா?'' என்று நீதிபதி ஏ.கெ.சிக்ரி கேள்வி எழுப்பினர்.

பின்னர், ''தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ்- ம.ஜ.த இடையே கூட்டணி இல்லை. தேர்தல் முடிவுகள் வந்த பின்பு சட்டவிரோதமாக கூட்டணி அமைத்துள்ளனர்'' என்று முகுள் ரோஹித்கி கூறினார்.

மேலும், ''காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்ட கடிதம் ஆளுநரிடம் கொடுக்கப்படவில்லை'' என்று கர்நாடக அரசு சார்பில் வாதாடிய துஷர் மேத்தா தெரிவித்தார். அதன் பின், ''நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது. போதிய நேரம் தர வேண்டும்'' என்று எடியூரப்பா சார்பில் கேட்கப்பட்டது.

இதனையடுத்து ''நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தான் நல்லது'' என்று காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் தெரிவித்தார்.  மேலும், ''கால தாமதமின்றி பெரும்பான்மையை நிரூபிக்க அழைக்க வேண்டும். நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் தயார். நம்பிக்கை வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்து எம்.எல்.ஏக்கள் எந்த அச்சமும் இன்றி வாக்களிக்க வழிவகை செய்ய வேண்டும்'' என காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங் தெரிவித்தார்.


இதற்கு பா.ஜ.க தரப்பில் ஆஜரான முகுள் எதிர்ப்பு தெரிவித்தார். ஆந்திர மாநிலத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் வர தாமதம் ஆகும். அதனால், திங்கட்கிழமை பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டார்.

அதன் பின்னர் வாதாடிய காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர் கபில் சிபில், ''எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தது தன்னிச்சையான முடிவு. யாரை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என முடிவு செய்யும் சுதந்திரம் ஆளுநருக்கு இல்லை. ஆட்சியமைக்க அழைக்கும் விவகாரத்தில் மரபுகள், நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்'' என்று கூறினார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ''கர்நாடகா சட்டப்பேரவையில் நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளை கர்நாடக டி.ஜி.பி எடுக்க வேண்டும். மூத்த எம்.எல்.ஏ ஒருவரை தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். கர்நாடகா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை நியமன எம்.எல்.ஏவை பரிந்துரைக்க கூடாது. வாக்களிக்க வரும் ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் தேவையான பாதுகாப்பு வசதியை கர்நாடக டி.ஜி.பி செய்துதர வேண்டும்'' என்று உத்தரவிட்டனர். 

மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை எடியூரப்பா எந்த ஒரு கொள்கை முடிவுகளையம் எடுக்கக் கூடாது. எம்.எல்.ஏ-க்கள் ரகசிய வாக்கு அளிக்க முடியாது. கைகளை உயர்த்தித்தான் வாக்குகளை பதிவு செய்ய வேண்டம் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

இதனால், காங்கிரஸ், ம.ஜ.த கட்சித் தலைவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜ.க பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close