கர்நாடகாவில் தற்காலிக சபாநாயகராக கே.ஜி. போபையா நியமனம்!

  Newstm Desk   | Last Modified : 18 May, 2018 04:22 pm


கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக பா.ஜ.கவின் மூத்த எம்.எல்.ஏ. கே.ஜி. போபையா நியமிக்கப்பட்டுள்ளார். 

கர்நாடக தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். ஆளுநரின் இந்த செயலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம்(மே.16) நள்ளிரவு இந்த வழக்கு அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டு, 'ஆளுநரின் முடிவில் உச்ச நீதிமன்றம் தலையிடமுடியாது, எனவே எடியூரப்பா முதல்வராக பதவியேற்க தடையில்லை' என நீதிபதிகள் கூறினர். மேலும் எடியூரப்பா, சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசமும் கொடுக்கப்பட்டது. அதன்படி, மே 17ம் தேதி எடியூரப்பாவும் கர்நாடக முதல்வராக பங்கேற்றார்.

தொடர்ந்து இந்த வழக்கின் இன்றைய விசாரணையில், ஆளுநரிடம் எடியூரப்பா அளித்த கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு விவாதத்திற்கு பிறகு நாளை(மே.19) மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதற்காக மூத்த எம்.எல்.ஏ ஒருவரை தற்காலிக சபாநாயகராக நியமித்துக்கொள்ளும்படியும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. 

நீதிமன்ற உத்தரவிற்கேற்ப, கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக பா.ஜ.கவின் மூத்த எம்.எல்.ஏ. கே.ஜி. போபையா இன்று நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிரந்தர சபாநாயகர் நியமிக்கப்படும் வரை இவர் தற்காலிகமாக சபாநாயகர் பதவியில் இருப்பார். கே.ஜி. போபையா 2009 முதல் 2013 வரை கர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராக இருந்துள்ளார். தற்போது விராஜ்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ ஆவார். 

தற்காலிக சபாநாயகர் எவ்வாறு தேர்தெடுக்கப்படுவார்?

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக தற்காலிக சபாநாயர் நியமிக்கப்படுவார். சட்டப்பேரவை செயலர், மூத்த எம்.எல்.ஏக்கள் சிலரை தற்காலிக சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைப்பார். அப்போதைய முதல்வர் அந்த மூத்த எம்.எல்.ஏக்களின் பெயரை பரிசீலித்து அவர்களில் ஒருவரை தேர்தெடுப்பார். தற்காலிக சபாநாயர் எந்தக்கட்சியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். சட்டப்பேரவை செயலர் பரிந்துரைத்தாலும் தற்காலிக சபாநாயகரை தேர்தெடுக்கும் முழு அதிகாரம் முதல்வருக்குத் தான் இருக்கும். பின்னர் தற்காலிக சபாநாயகருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். நம்பிக்கை வாக்கெடுப்பு அவரது முன்னிலையில் நடைபெறும். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close