கர்நாடக கூத்து: தற்காலிக சபாநாயகர் நியமனத்தை எதிர்த்து வழக்கு!

Last Modified : 18 May, 2018 11:03 pm

கர்நாடகத்தில் நாளை சட்டமன்றத்தில் முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டுவர உள்ளார். அவையை வழிநடத்த தற்காலிக சபாநாயகராகப் பா.ஜ.க-வைச் சேர்ந்த போப்பையாவை ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை எதிர்த்துக் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. 

பெரும்பான்மை இல்லாத சூழலில், பா.ஜ.க-வை ஆட்சி அமைக்கக் கர்நாடக ஆளுநர் வாஜ்பாய் வாலா அழைத்தார். இதை எதிர்த்துக் காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. எடியூரப்பா பதவி ஏற்பதற்குத் தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பான வழக்கை இன்று (வெள்ளிக்கிழமை) நடத்துவதாக அறிவித்தது. 

இன்று நடந்த வழக்கில், பெரும்பான்மையை நாளை (சனிக்கிழமை) நிரூபிக்க வேண்டும், அவையின் மூத்த உறுப்பினரைத் தற்காலிக சபாநாயகராக நியமிக்க வேண்டும் என்று சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக மூன்று முறை மட்டுமே எம்.எல்.ஏ-வாக இருந்த போப்பையாவை தற்காலிக சபாநாயகராக ஆளுநர் நியமித்துள்ளார். 

கடந்த முறை பா.ஜ.க ஆட்சியின்போது, எடியூரப்பாவுக்கு எதிராக எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி உயர்த்தியபோது, அவர்களைத் தகுதி நீக்கம் செய்து ஆட்சியைக் காப்பாற்றியவர் போப்பையா. இதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்றைக்குப் பல சட்டமன்ற உத்தரவுகளுக்கு முன்னுதாரணமாக உள்ளது. அந்த அளவுக்குப் போப்பையாவின் செயல்பாடு விமர்சிக்கப்பட்டது. 

போப்பையா நியாயமாக நடந்துகொள்ள மாட்டார் என்பது காங்கிரஸ் கட்சியின் கருத்தாக உள்ளது. இதனால், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகப் போப்பையா நியமிக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை காலை 10 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளது. அடுத்த 18 மணி நேரத்தில் கர்நாடகாவில் என்ன எல்லாம் நடக்கப்போகிறதோ... ஜனநாயகம் எந்த அளவுக்கு அவமானப்படுத்தப்படப் போகிறதோ என்று நடுநிலையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement:
[X] Close