இன்று 4 மணிக்கு கிளைமேக்ஸ்... பெரும்பான்மையை நிரூபிப்பாரா எடியூரப்பா?

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 19 May, 2018 09:10 am

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில் பா.ஜ.க-வின் எடியூரப்பா உள்ளார். எதிர்க்கட்சிகளில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பெரும்பான்மையை உறுதி செய்ய 8 எம்.எல்.ஏ-க்கள் தேவை. பா.ஜ.க ஆட்சி அமைப்பதைத் தடுக்க, குறைவான எம்.எல்.ஏ-க்களை வைத்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது. இதன்மூலம், தேர்தலுக்குப் பிந்தைய இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தது. தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் அழைப்பு விடுத்தது.

அதேநேரத்தில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜ.க-வும் தங்களைத்தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று அழைத்தது. சர்க்காரியா கமிட்டி பரிந்துரைப்படி, தேர்தலுக்குப் பிறகு தனிப்பெரும் கட்சியை முதலில் ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர். பா.ஜ.க-வின் எடியூரப்பாவும் முதல்வராக பதவி ஏற்றார்.

இதை எதிர்த்து காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகின. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பா.ஜ.க மற்றும் கர்நாடக ஆளுநருக்கு சரமாரி கேள்விகளை எழுப்பினர். மேலும், இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மூத்த உறுப்பினரை தற்காலிக சபாநாயகராக நியமித்து இந்த வாக்கெடுப்பை நடத்தவும் உத்தரவிட்டனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த பா.ஜ.க எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களை இழுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது. எம்.எல்.ஏ-க்களுக்கு 150 கோடி ரூபாய்க்கு மேல் அளிப்பதாகவும் அத்துடன் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் ஆசைவார்த்தை காட்டி வருகிறது. கனிம வள மாஃபியா என்று அழைக்கப்படும் பா.ஜ.க-வின் ரெட்டி சகோதரர்கள் இதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக ஆதாரத்துடன் குற்றம்சாட்டியது காங்கிரஸ்.

எடியூரப்பாவே தங்களுக்கு காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்தள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தான் சார்ந்துள்ள லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் அத்தனை பேரையும் ஒன்று சேர்த்து பா.ஜ.க வை ஆதரிக்க வைக்க அவர் முயற்சித்து வருகிறார். இதற்காக சமுதாயத் தலைவர்களும் பேசி வருகின்றனர். இந்தநிலையில், இன்று கடைசி நேரத்தில் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் பா.ஜ.க தீவிரமாக ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பா.ஜ.க-வின் முயற்சிக்கு எதிர்வினையாக, காங்கிரஸ், ம.ஜ.த கட்சியும் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களை இழுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளன. கடைசி நேரத்தில், சட்டமன்றத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சிலர் எடியூரப்பாவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று கூறப்படுகிறது.


அதேநேரத்தில், பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், தங்கள் ஆதரவு சபாநாயகரை வைத்து குறுக்கு வழியில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அப்படி செய்தால் அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படும் சூழல் உள்ளதால், அதற்கு வாய்ப்பு இல்லை என்று பா.ஜ.க வட்டாரங்கள் கூறுகின்றன. தற்காலிக சபாநாயகர் நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், நீதிமன்ற தீர்ப்பு எப்படி வரப்போறிதோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

என்ன நடக்கப்போகிறதோ, இன்று மாலை எடியூரப்பா எப்படி பெரும்பான்மையை நிரூபிப்பார் என்ற எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ளது. அனைவரின் கவனமும் கர்நாடக சட்டப்பேரவையை நோக்கியே உள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close