நம்பிக்கை வாக்கெடுப்பின் போது போபையா தான் சபாநாயகர் : உச்சநீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 19 May, 2018 11:51 am


கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள போபையாவை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

கர்நாடகத் தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதனை எதிர்த்து காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த மே.16ம் தேதி நள்ளிரவு 'எடியூரப்பா முதல்வராக பதவியேற்க தடையில்லை' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  அதன்படி, மே 17ம் தேதி எடியூரப்பாவும் கர்நாடக முதல்வராக பங்கேற்றார். ஆனால் அவருக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டதை காங்கிரஸ் எதிர்த்தது.

அடுத்த விசாரணையில், '15 நாட்கள் அவகாசம் குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என்ற காங்கிரஸ் தரப்பு கோரிக்கையை ஏற்று, பல்வேறு விவாதத்திற்கு பிறகு இன்று(மே.19) மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதற்காக மூத்த எம்.எல்.ஏ ஒருவரை தற்காலிக சபாநாயகராக நியமித்துக்கொள்ளும்படியும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. நீதிமன்ற உத்தரவிற்கேற்ப, கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக பா.ஜ.கவின் மூத்த எம்.எல்.ஏ. கே.ஜி. போபையா நியமிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. காங்கிரஸ் தரப்பில் வழக்கறிஞர் கபில் சிபல், பா.ஜ.க சார்பில் முகில் ரோஹித்கி ஆஜராகி வாதாடி வருகிறார்.


காங்கிரஸ் தரப்பில், "போபையா சபாநாயகராக இருந்தால் நம்பிக்கை வாக்கெடுப்பு சரியாக, நியாயமாக நடக்காது. அவர் ஏற்கனவே சட்டப்பேரவையில் எடியூரப்பாவுக்கு ஆதரவாகி செயல்பட்டு உச்சநீதிமன்ற கண்டிப்பாய் பெற்றவர். அவர் சபாநாயகர் பதவியில் போதிய அனுபவம் இல்லாதவர். அவரை விட மூத்த உறுப்பினர்கள் எம்.எல்.ஏக்களாக உள்ளனர்" என  வாதிடப்பட்டது. 

இதையடுத்து, போபையா நம்பிக்கை நம்பிகை வாக்கெடுப்பை ஒத்தி வைக்க சம்மதமா? என நீதிபதிகள் கேட்க அதற்கு காங்கிரஸ் தரப்பு மறுத்தது. 

இவ்வாறாக நடைபெற்ற விசாரணைக்கு பிறகு நீதிபதிகள், தற்போதைய சூழ்நிலையில் போபையாவை தற்காலிக சபாநாயகர் பதவியில் இருந்து நீக்க முடியாது. அதே நேரத்தில் குறிப்பிட்ட ஒருவரை சபாநாயகராக நியமிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு இல்லை" என கூறி, போபையாவை தற்காலிக சபாநாயகர் பதவியில் இருந்து நீக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பின் போது போபையா தான் சபாநாயகராக இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது. 

மேலும், நம்பகத்தன்மைக்காக இன்று மாலை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பை வீடியோ பதிவு அல்லது ஊடகங்களில் ஒளிபரப்ப காங்கிரஸ் தரப்பு கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதனடிப்படையில், நம்பிக்கை வாக்கெடுப்பை அனைத்து சேனல்களிலும் நேரலை செய்யலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close