பெரும்பான்மை இல்லை; பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா!

  Newstm Desk   | Last Modified : 19 May, 2018 04:35 pm


கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு முன் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருந்த நிலையில், காலையில் எம்.எல்.ஏக்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதற்கிடையே காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் காணாமல் போனது, எடியூரப்பா, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக  வெளியாக ஆடியோ உள்ளிட்டவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

பிற்பகல் தொடங்கிய சட்டபேரவை கூட்டத்தில் பரபரப்பாக எதிர்பார்த்திருந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக, 3.30 மணியளவில் எடியூரப்பா உரையாற்றினார்.

அவர் பேசியதாவது: கர்நாடக தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. மக்கள் காங்கிரஸ், ம.ஜ.தவை புறக்கணித்ததுடன், பா.ஜ.க ஆட்சிக்கு வரவேண்டுமென்று விரும்புகின்றனர். மக்களின் தீர்ப்புக்கு எதிராக காங்கிரசும், ம.ஜ.தவும் ஒன்று சேர்ந்துள்ளன. கடந்த 5 வருட ஆட்சியில் விவசாயிகள் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். 

என்னுடைய இறுதி மூச்சு உள்ளவரை விவசாயிகளுக்காக உழைப்பேன். கர்நாடக மக்களுக்காக இறுதி வரை சேவை செய்வேன். கர்நாடக  மக்கள் மதிப்பு, மரியாதையுடன் வாழ நினைக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் தேவையை புரிந்து வைத்துள்ளேன். பெங்களூரு நகரம் குடிநீர் பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறது. உயிர் இருக்கும் வரை கர்நாடக மாநில மக்களுக்காக நான் போராடுவேன்.


கர்நாடகாவில் 3,750 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகள் குறித்து அவர்கள் சிறிதும் கவலைப்படவில்லை. மக்களின் நன்மதிப்பை பெற்றது எங்கள் ஆட்சி, கடந்த 5 ஆண்டுகால காங். ஆட்சி மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்தது. காங்.- ம.ஜ.த ஆட்சியில் இருக்கக்கூடாது என்பதே மக்களின் விருப்பம். மக்களின் தீர்ப்புக்கு எதிராக காங்.- ம.ஜ.த கட்சிகள் கைகோர்த்துள்ளன. இந்த 2 கட்சிகளுக்கும் மக்கள் சந்தர்ப்பம் வழங்கவில்லை, இவர்கள் சுயநலத்திற்காக ஒன்று கூடி ஆட்சியமைக்கின்றனர். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதும், பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை மாநிலத்துக்கு வழங்கினார். மத்தியில் மோடி அரசும், மாநிலத்தில் பா.ஜ.க அரசும் இருந்தால் அனைத்து விதமான பலன்களையும் பெற்றிருப்பேன்" என உருக்கமாக பேசினார். 

தொடர்ந்து, போதிய பெரும்பான்மை இல்லாததால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். சில நிமிடங்களில் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார். இதையடுத்து காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.  விரைவில் குமாரசுவாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார். 

எடியூரப்பாவின் இந்த அறிவிப்பினை அடுத்து, காங்கிரஸ் - ம.ஜ.த மகிழ்ச்சியில் திளைத்துள்ளது. சட்டப்பேரவையில் காங்கிரசின் டி.கே.சிவகுமார் மற்றும் ம.ஜ.தவின் குமாரசுவாமியும் கைகோர்த்து தங்களது வெற்றியினை மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close