எடியூரப்பா ராஜினாமா செய்ததற்கான காரணங்கள் என்னென்ன?

  Newstm Desk   | Last Modified : 19 May, 2018 05:24 pm


கர்நாடக முதல்வர் பதவியினை எடியூரப்பா ராஜினாமா செய்ய கட்சி தலைமை தான் காரணம் என செய்தி வெளியாகியுள்ளது.

இன்று கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதாக இருந்தது. அனைவரும் பரபரப்பாக எதிர்பார்த்திருந்த அந்த சமயத்தில் 3.30 மணியளவில் எடியூரப்பா உரையாற்றத் தொடங்கினார். அவரது கொள்கைகளை எடுத்துரைத்து மிகவும் உருக்கமாக பேசிய அவர், இறுதியில் போதிய பெரும்பான்மை இல்லாததால் தான் பதவி விலகுவதாக அவர் அறிவித்தார். இதற்கு அங்கிருந்த பா.ஜ.கவினர் பெருமிதத்துடன் அவரது முடிவுக்கு ஆதரித்தனர்.

எடியூரப்பாவின் இந்த ராஜினாமாவால் நம்பிக்கை வாக்கெடுப்பு பொய்த்து போனது. இன்று பிற்பகலில் இருந்தே சில கன்னட ஊடகங்கள், எடியூரப்பா ராஜினாமா செய்யப்போவதாக தகவல் தெரிவித்து வந்தது. ஆனால் ஒரு சில ஊடகங்கள் இதனை மறுத்தன. இறுதியாக தற்போது எடியூரப்பா பதவி விலகியுள்ளார். இன்று காலை வரை நம்பிக்கை வாக்கெடுப்பில் 100 சதவீதம் வெற்றி பெறுவோம் என்று கூறிய எடியூரப்பா தற்போது பின்வாங்கியது ஏன் என்ற கேள்வி எழுந்தது.


இவரது ராஜினாமாவுக்கு முக்கிய காரணம் இன்று வெளியான ஆடியோக்கள் தான் என பேசப்படுகிறது. தங்களிடம் பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் நோக்கில் பா.ஜ.க குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளது. அவர்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் பேசிய ஆடியோக்கள் இன்று காலை முதல் ஒவ்வொன்றாக கசிந்தன. இறுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பி.சி பாட்டிலுடன், எடியூரப்பாவே குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ள ஆடியோ வெளியாகியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் எடியூரப்பா மீதான அதிருப்தி வெளிப்பட்டது. 

இதனால் கட்சித் தலைமை தான் அவரை இந்த முடிவு எடுக்க வைத்துள்ளது. பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷாவின் அறிவுரைப்படி, எடியூரப்பா பதவி விலகியுள்ளதாக செய்திகள் பரவுகின்றன. கட்சிக்கு ஏற்பட்டுள்ள களங்கம் தொடரக்கூடாது என்றதால் தான் எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளதாக பேசப்படுகிறது.

மற்றொரு காரணமாக உச்சநீதிமன்ற இந்த தீர்ப்பு தான். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அவகாசம் கொடுத்திருந்தால் குதிரை பேரம் கண்டிப்பாக நடந்திருக்கும், பா.ஜ.கவும் ஆட்சி அமைத்திருக்கும் என பொதுமக்களிடம் பரவலாக பேச்சு அடிபடுகிறது. அதற்கு காங்கிரஸ்,மஜத எம்.எல்.ஏக்கள் கொஞ்சம் 'ஸ்ட்ராங்' ஆக இருந்ததும் காரணம் தானே...

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close