மீண்டும் ஆட்சி மாற்றம்... ஆபரேஷன் லோட்டஸ் முடியவில்லை!

  Newstm Desk   | Last Modified : 20 May, 2018 12:29 am

இன்னும் சில நாட்களில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ-க்களை இழுத்து குமராசாமியின் ஆட்சியை கவிழ்த்து எடியூரப்பா மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று தொண்டர்களுக்கு பா.ஜ.க மூத்த நிர்வாகிகள் ஆறுதல் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், பெரும்பான்மை பெற ஒரு சில எம்.எல்.ஏ-க்கள் தேவை என்ற நிலை பா.ஜ.க-வுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், எப்படியும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ-க்களை தங்கள் பக்கம் இழுத்துவிடலாம் என்று கணக்குப் போட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பா.ஜ.க-வுக்கு பேரிடியாக மாறியது. 15 நாள் அவகாசம் கிடைத்த நிலையில், ஒரே நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், ஆதரவு எம்.எல்.ஏ-க்களை ஒன்று சேர்க்க முடியாமல் போய்விட்டது.

காங்கிரஸ், ம.ஜ.த கட்சி எம்.எல்.ஏ-க்களை அக்கட்சியின் தலைமை மிகவும் கவனத்துடன் பார்த்துக்கொண்டது. இதனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், ராஜினாமா செய்தார் எடியூரப்பா. இதனால், கர்நாடகா மட்டுமின்றி ஒட்டுமொத்த பா.ஜ.க தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுக்கு பா.ஜ.க தலைமை தற்போது ஆறுதல் கூறி வருகிறது.

இவ்வளவு நாள் கட்டுக்கோப்பாக பாதுகாத்த எம்.எல்.ஏ-க்கள் இனி தனித்துவிடப்படுகின்றனர். அவர்களை மடக்குவது ஒன்றும் அவ்வளவு பெரிய காரியம் இல்லை. இதனால் குமாரசாமி எப்படி ஆட்சி நடத்திவிடுவார்... நமக்கு காட்டிய தண்ணியை மீண்டும் காங்கிரஸ், ம.ஜ.த கட்சிக்கு காட்டுவோம்... அவர்கள் எம்.எல்.ஏ-க்களை இழுத்து, அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என்று தொண்டர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறது.

பா.ஜ.க அப்படி ஒரு முடிவு எடுத்தால் அது அக்கட்சிக்கு உள்ள நல்ல பெயரை கெடுக்கும் விதமாகவே இருக்கும் என்று கருதுகின்றனர் நடுநிலை பா.ஜ.க தொண்டர்கள். மோடி அரசின் சாதனைகள், ஊழல் அற்ற ஆட்சி போன்றவற்றால் பா.ஜ.க-வுக்கு தமிழகம் தவிர்த்து, நாடு முழுவதும் செல்வாக்கு அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் அரங்கேறிய சில செயல்கள் இந்த பெயருக்கு வேட்டு வைப்பதாகவே உள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கும் அவ்வளவு நல்ல உறவு இருந்தது இல்லை. சித்தராமையா மற்றும் காங்கிரஸ் கட்சியை ஒழிப்பேன் என்று சபதம் போட்டவர்தான் தேவ கவுடா. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு தேவ கவுடா கட்சியே இருக்காது என்று சாபம் கொடுத்தவர் சித்தராமையா. இவர்கள் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்துவது, மாதக்கணக்கில் கூட தாண்டாது என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

எதிர்க்கட்சிகளை உடைக்கும் வேலையைவிட்டுவிட்டு, எதிர்க்கட்சி வரிசையில் அமர தயார் என்று எடியூரப்பா சொல்லியிருந்தால் அவருக்கு மரியாதை கூடியிருக்கும். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. அப்போது கர்நாடக சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அப்போது, கர்நாடக மக்கள் முழு பெரும்பான்மையையே பா.ஜ.க-வுக்கு அளித்திருப்பார்கள் என்பது அவர்கள் கருத்து.

ஆனால், எதிர்க்கட்சியாக உட்காராமல், கட்சியை உடைக்க முயற்சித்ததும், அதற்காக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதும் பா.ஜ.க மீதான அபிப்பிராயத்தை மாற்றியுள்ளதாகவே கருதப்படுகிறது. இனியாவது இதுபோன்ற செயல்களை கைவிட்டு, மக்கள் மதிப்பை பெறும் முயற்சியில் பா.ஜ.க ஈடுபடுவது அதன் வளர்ச்சிக்கு நல்லது!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close