கைக்கு எட்டுனது வாயிக்கு எட்டல! 2வது இடத்தில் எடியூரப்பா!!

  ஐஸ்வர்யா   | Last Modified : 20 May, 2018 03:41 pm


இந்திய அரசியல் வரலாற்றில் மிக குறைந்த நாட்கள் மட்டுமே முதலமைச்சராக இருந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் எடியூரப்பா. இது எடியூரப்பாவுக்கு ஒன்றும் புதிதல்ல, இரண்டாவது முறை என்கிறது அரசியல் டைரி!

கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பே கன்கலங்கி பதவி விலகிய எடியூரப்பாவுக்கு இதற்கு முன்னரும் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 2007 ஆம் ஆண்டு எடியூரப்பா முதல்வராக இருந்த போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்ததால் 7 நாட்களில் ஆட்சியை பறிகொடுத்தார் எடியூரப்பா. அவரது பதவி ஒருவாரம் கூட நீடிக்கவில்லை. அன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் நடந்த தோல்வி பயமே, நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமலேயே வெளிவந்ததற்கு காரணமாக கூட இருக்கலாம். பதவியை இழப்பதால் ஒன்றையும் இழக்கப்போவதில்லை, பதவியில் இல்லை என்றாலும் மக்களுக்காகவே என் வாழ்க்கை, மக்களுக்கு நல்லது செய்வேன், என்ற எடியூரப்பாவின் உருக்கமான பேச்சின் உண்மைத் தன்மை இன்னும் 5 வருடங்களில் தெரியும் என்பது கர்நாடக மக்களின் எதிர்பார்ப்பு.

முதல்வன் படத்தில் வரும், ஒரு மாநிலத்தில் ஒரு நாள் முதல்வராக இருந்த நடிகர் அர்ஜுன் மாதிரி, இருந்த 3 நாட்களில் எடியூரப்பா செய்த மிகப்பெரிய நல்ல விஷயம் விவசாய கடன் தள்ளுபடி, ஆனால் எடியூரப்பாவின் கையெழுத்து செல்லுபடியாகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எடியூரப்பாவை போல பல ஷார்ட் டைம் முதலமைச்சர்கள் இந்தியாவில் உள்ளனர்.


ஜகதாம்பிகா பால்: இவர் ஒரு உண்மையான ஒரு நாள் முதல்வர். உத்தர பிரதேச மாநில முதல்வராக 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் பதவியேற்று, அடுத்த நாள் காலையே உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் பதவியை ராஜினாமா செய்தார். இவரும் பா.ஜ.க.வை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது. 

சதிஷ் பிரசாத் சிங்: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் எடியூரப்பாவை போன்று 3 நாட்கள் முதலமைச்சர் இருக்கையில் இருந்துள்ளார். பிகார் மாநில தற்காலிக முதல்வராக 1968ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி பதவியேற்று, பிப்.1 இல் பதவியை இழந்தார். பீகாரில் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து பதவியேற்ற முதல் முதலமைச்சர் சதிஷ் பிரசாத் சிங் என்பது குறிப்பிடதக்கது.

பி.பி மண்டல்: சதிஷ் பிரசாத் சிங்கை தொடர்ந்து பீகாரின் முதலமைச்சராக பதவியேற்ற பி.பி மண்டலுக்கும் முதலமைச்சர் பதவி ராசியில்லை. பிப்ரவரி 1ஆம் தேதி பதவியேற்ற இவர் மார்ச் 2ஆம் ராஜினாமா செய்து 31 நாட்கள் முதலமைச்சர் பதவியில் இருந்தவர் என்று டைரியில் இடம் பிடித்தார்.

ஓம் பிரகாஷ் சௌதாலா: ஹரியானா மாநில முதல்வராக 1990ஆம் ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்ற இவர், வெறும் 5 நாட்கள் மட்டுமே முதலமைச்சராக இருந்து பின் முதல்வர் பதவியை துறந்தார். இதையடுத்து அடுத்த ஆண்டு மீண்டும் முதலமைச்சராக பதவியேற்ற இவர், அதிர்ஷ்டம் இல்லாததால் 14 நாட்களில் பதவியில் இருந்து விலக்கப்பட்டார்.

எஸ்.சி.மராக்: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.சி. மராக் மேகாலயாவில் 1998ஆம் ஆண்டு முதல்வராக பதவியேற்று சில காரணங்களால் 13 நாட்களில் தனது முதல்வர் பதவியை பறிக்கொடுத்தார்.

ஜானகி ராமசந்திரன்: தமிழ்நாட்டில் அதிமுக கட்சியை சேர்ந்த எம்ஜிஆரின் மனைவி ஜானகி, எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு 1988 ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்று பின் 23 நாட்களில் பதவியில் இருந்து இறக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

முகமது கோயா:  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) தலைவரான இவர், கேரளாவில் 1979 ஆம் ஆண்டு 45 நாட்களுக்கு முதலமைச்சராக பதவிவகித்தார். கேரளாவில் குறுகிய கால முதலமைச்சர் என்ற பட்டம் இவருக்கு உண்டு. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.