ஊதியம் கேட்ட 16 வயது சிறுமி துண்டு துண்டாய் வெட்டி கொலை

Last Modified : 21 May, 2018 11:05 am

தான் செய்த வேலைக்கு ஊதியம் கேட்ட 16 வயது சிறுமி துண்டு துண்டாய் வெட்டி கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. 

மே 4ந் தேதி டெல்லி, பஸ்சிம் விஹார் பகுதியில் ஒரு பையில் பெண்ணின் உடல் வெட்டப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. 

அந்த தகவலை அடுத்து போலீசார் அந்த இடத்திற்கு சென்று ஒரு பையில் பல துண்டுகளாக வெட்டப்பட்டு கிடந்த உடலை மீட்டனர். பின்னர் இதுகுறித்து அந்த பகுதியில் இருக்கும் 200 வீடுகளில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் அங்கு வசித்து வரும் ஒருவர் கடந்த 2 நாட்களாக காணவில்லை என்று தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் அந்த நபர் குறித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பெயர் மஞ்சித் என்பதும் அவர் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்து இங்கு தங்கி இருப்பது தெரியவந்தது. அவரது சொந்த ஊரான கும்லா மாவட்டத்திலும் போலீசார் அவரை தேடி உள்ளனர். ஆனால் அங்கும் அவரை காணவில்லை.

2 வார தேடுதலுக்கு பிறகு, அவர் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர் திடுக்கிடும் உண்மைகளை கூறி உள்ளார். 

இவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜார்கண்டில் ஏழை எளிய வீட்டில் இருக்கும் இளம் பெண்களிடம் வேலை வாங்கி கொடுப்பதாக டெல்லிக்கு அழைத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதுபோல அந்த மாநிலத்தில் இருந்து சோனி குமாரி என்னும் 16 வயது சிறுமியை அழைத்து வந்துள்ளனர். டெல்லியில் உள்ள ஒரு வீட்டில் சோனி வேலை செய்து வந்துள்ளார். அவரது ஊதியத்தை மஞ்சித் வாங்கி கொண்டு தராமல் இருந்துள்ளார். வேலைக்கு சேர்ந்து ஒரு வருடத்திற்கு பிறகு தனது ஊருக்கு திரும்ப சோனி திட்டமிட்டுள்ளார். அதற்காக தனது ஊதியத்தை தருமாறு மஞ்சித்திடம் அவர் கேட்டுள்ளார். 

ஆனால் மஞ்சித் ஊதியத்தை தராமல் பல காரணங்கள் கூறி சோனியை சமாளிக்க முயன்றுள்ளார். ஆனால் சோனி தொடர்ந்து தனது ஊதியத்தை தருமாறு கேட்டுள்ளார். கோபமடைந்த மஞ்சித் சோனியை தாக்கி அவரை துண்டு துண்டாக வெட்டி பையில் கட்டி தூக்கி எறிந்துள்ளார். 

கொலை செய்ததை மஞ்சித் ஒப்புக்கொண்ட பிறகு போலீசார் அவரை கைது செய்தனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close