கர்நாடக முதல்வராக குமாரசாமி இன்று பதவி ஏற்கிறார்!

  Sujatha   | Last Modified : 23 May, 2018 07:02 am


கர்நாடக மாநிலத்தின் முதல்வராக ஜனதா தளம் (எஸ்)  கட்சி தலைவர் குமாரசாமி இன்று பதவி ஏற்கிறார். துணை முதல்வராக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பதவி ஏற்கிறார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக, காங்கிரஸ்,  ஜனதா தளம் (எஸ்)  உட்பட எந்த கட்சியும் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெறாததால், அங்கு எந்த கட்சி ஆட்சி அமைப்பது என்ற இழுபறி நிலை உண்டானது. இதனை தொடர்ந்து 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற  பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். அதோடு பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமும் கொடுத்தார். இதன் அடிப்படையில் எடியூரப்பா முதல்வர் பதவி ஏற்றார்.  

ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு கடந்த 19-ந் தேதி கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. பெரும்பான்மை இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.    

இதையடுத்து ஜனதா தளம் (எஸ்) தலைவர் குமாரசாமியை, ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார். கவர்னரின் அழைப்பை ஏற்று கர்நாடகத்தின் 24-வது முதல்வராக   இன்று (புதன்கிழமை) குமாரசாமி பதவி ஏற்கிறார். அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் துணை முதல்வர் பதவி ஏற்பார் என தெரிகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. அதன் பிறகு மற்ற மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இன்று மாலை 4 மணிக்கு  பெங்களூரு விதான சவுதா கட்டிடத்தின் முன்பகுதியில் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்த பதவி ஏற்பு விழாவில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் முதல்வர் சித்தராமையா, வீரப்பமொய்லி, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் குமாரசாமியின்  பதவி ஏற்பு விழா, தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close