தூத்துக்குடி மக்களுக்கு நீதி வேண்டும் - பா.ஜ.க எம்.பி ஆவேசம்!

  கனிமொழி   | Last Modified : 25 May, 2018 04:52 pm


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தமிழகத்தையே உலுக்கி வருகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வந்த மக்கள் 100-வது நாளான கடந்த செவ்வாய் கிழமை அன்று கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாகச் சென்றனர். அப்போது காவல்துறை ஏவல்துறையாக மாறி, உரிமைகளுக்காகப் போராடி வந்த அந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 13-பேர் உயிரிழந்தார்கள். வழக்கம் போல 10 லட்சம் என அவர்களின் உயிருக்கு விலை நிர்ணயம் செய்திருக்கிறது தமிழக அரசு. 

இதனை கண்டித்து தமிழகமெங்கும் பல்வேறு போராட்டங்களும் உருவ பொம்பை எரிப்பு சம்பவங்களும் நடந்து வருகின்றன. இணையப் போரளிகளும் இது குறித்து தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள். தற்போது தமிழகம் கடந்து இந்திய அளவில் பலரை இந்த சம்பவம் பேச வைத்துள்ளது. இதனால் பலரும் தங்களின் ஆதங்கங்களை ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்கள்.

குறிப்பாக பா.ஜ.க-வின் எம்.பி சத்ருகன் சின்ஹா தன்னுடைய ட்விட்டர் பதிவில் இந்த விவகாரம் குறித்து மிகவும் கடுமையான கருத்தை முன் வைத்துள்ளார். அதில், "சார்... இப்போது பேச வேண்டிய நேரம் வந்திருக்கிறது. கத்துவாவில் நடந்த ஆசிஃபாவின் வன்கொடுமை கொலையின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. பெட்ரோல் விலை உயர்வைப் பற்றி எந்த பதிலும் இல்லை. கருணையே இல்லாமல் தூத்துக்குடியில் நடந்தேறிய கொலைகளைப் பற்றியும் இன்னும் வாய் திறக்கவில்லை. அந்த அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த யார் அனுமதி அளித்தது? அதுவும் ஆட்டோமெடிக் ரைஃபிள்களில்.

காஷ்மீர் பற்றி எரிந்தது, நீங்கள் ஒன்றுமில்லை என்றீர்கள். இப்போது தமிழகம் வெந்துக் கொண்டிருக்கிறது. இப்போதாவது மக்கள் சேவகர் வாய் திறப்பாரா? அப்பாவி மக்களை கொன்றவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர்களுக்கான நீதி நிச்சயம் வழங்கப்பட வேண்டும். இந்த அரசை மிகுந்த எழுச்சியோடு கேள்வி கேட்டு, தகுந்த பதிலைப் பெற, இந்த விஷயத்தில் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நான் முழு ஆதரவை அளிக்கிறேன்" என கூறியுள்ளார்.

பா.ஜ.க-வில் இருந்து இப்படி ஒரு குரல் எழுந்துள்ளதற்கு தமிழக மக்கள் ஆச்சர்யம் அடைந்திருப்பதுடன், அவருக்கு நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close