நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி!

  Newstm Desk   | Last Modified : 25 May, 2018 04:31 pm


இன்று கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு அபார வெற்றி பெற்றுள்ளது.

கர்நாடகாவில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க 104 இடங்களை கைப்பற்றியது. பெரும்பான்மை இல்லாத போதும் ஆளுநர் அழைப்பிற்கேற்ப எடியூரப்பா கடந்த மே 17ல் முதல்வராக பதவியேற்றார். பா.ஜ.கவை ஆட்சி அமைக்க விடக்கூடாது என்ற நோக்கத்தில் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணிக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து உச்ச நீதிமன்ற வழக்கில் பெரும்பான்மையை உடனே நிரூபிக்க எடியூரப்பாவுக்கு  நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து, ஆட்சி அமைக்க குமாரசாமியை ஆளுநர் அழைக்க, அவர் மே 23ல் முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து குமாரசாமி ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நடந்தது. முன்னதாக இன்று பகல் 12.15 மணிக்கு தற்காலிக சபாநாயகா் கே.ஜி.போபையா தலைமையில் சட்டசபை கூடியது. முதலில் சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தோ்தலில் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி சாா்பில் ரமேஷ்குமாா், பா.ஜ.க. சாா்பில் சுரேஷ்குமாா் போட்டியிட்டனர். இறுதியில் ரமேஷ் குமார் வெற்றி பெற்று சபாநாயகர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  கடைசி நேரத்தில் பா.ஜ.கவின் சுரேஷ் குமார் சபாநாயர் தேர்வில் இருந்து விலகினார்.


இதைத்தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு சட்டப்பேரவையில் சபாநாயகர் ரமேஷ் குமார் தலைமையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை கோரி, எம்.எல்.ஏக்கள் முன்பாக உரையாற்றினார். அவர் உரையை முடித்ததும், பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் பேரவையை விட்டு வெளியேறினர். நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்தனர். 

தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி 117 வாக்குகள் பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார். சபாநாயகர் ரமேஷ் குமார் இதனை சட்டப்பேரவையில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதனால் பல்வேறு பரபரப்பிற்கு பிறகு, கர்நாடகாவில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி சார்பில் குமாரசாமி தான் முதல்வர் என்பது உறுதியாகியுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close