இடைத்தேர்தல் முடிவு முழு விபரங்கள்: காங்கிரஸ் முன்னிலை

  Newstm Desk   | Last Modified : 31 May, 2018 06:19 pm
by-election-final-results-for-loksabha-assembly-constituency

இன்று நடந்த 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் 4 தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவில் பால்கர், பண்டாரா- கோண்டியா மற்றும் நாகாலாந்து ஆகிய 4 மக்களவை தொகுதிகளுக்கும், நூர்பூர்(உத்தரபிரதேசம்), ஜோகிஹட்(பீகார்), தாராலி(உத்தரகாண்ட்), கோமியா(ஜார்கண்ட்),  சில்லி(ஜார்கண்ட்), மகேஷ்தலா(மேற்கு வங்காளம்), அம்பதி(மேகாலயா), பால்ஸ் கடேகான் (மகாராஷ்டிரா), ஷாகோட் (பஞ்சாப்), செங்கண்ணூர் (கேரளா), ஆர்.ஆர்.நகர்(கர்நாடகா) ஆகிய 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த மே 28ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த 15 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததையொட்டி இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் விபரங்கள் பின்வருமாறு:

மக்களவைத் தொகுதிகள்:

கைரானா(உ.பி): ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்.எல்.டி) கட்சியைச் சேர்ந்த டபாசம் ஹசன் பா.ஜ.க வேட்பாளர் மிரிகங்காவை விட 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி!

பால்கர்(மகாராஷ்டிரா): பா.ஜ.க வேட்பாளர் கவிட் ராஜேந்திர தேத்யா 29,572 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

பண்டாரா- கோண்டியா (மகாராஷ்டிரா): 20,583 வாக்குகள் வித்தியாசத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மதுகர் குக்டே யஷ்வந்த்ரோ வெற்றி பெற்றார். 

நாகாலாந்து: நாகலாந்து தொகுதியில் பா.ஜ.க கூட்டணியுடன் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி முதலில் முன்னிலை பெற்று வந்தது. இறுதியில் மக்கள் முன்னணி கட்சி வெற்றி பெற்று நாகலாந்து மக்களவை தொகுதியை கைப்பற்றியுள்ளது. 

சட்டப்பேரவை தொகுதிகள்: 

நூர்பூர்(உத்தரபிரதேசம்):  சமாஜ்வாதி கட்சியின் நயிம் உய் ஹசன், பா.ஜ.கவின் அவ்னி சிங்கை 6,211 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இதனால் உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியினர் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். 

ஜோகிஹட் (பீகார்): ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் ஷாநவாஸ் 39,000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். 

தாராலி(உத்தரகாண்ட்): பா.ஜ.க வேட்பாளர் முன்னி தேவி ஷா 1,811 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சட்டப்பேரவை தொகுதிகளில் இந்த ஒரு தொகுதியில் மட்டுமே  பா.ஜ.க  வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கோமியா & சில்லி(ஜார்கண்ட்): ஜார்கண்ட் மாநிலத்தில் கோமியா மற்றும் சில்லி ஆகிய இரு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் இரண்டு தொகுதிகளிலும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா அமோக வெற்றி பெற்றுள்ளது. 

மகேஷ்தலா(மேற்கு வங்காளம்): மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் மகேஷ்தலா தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் துலால் சந்திர தாஸ் வெற்றி பெற்றார். இதனால் திரிணாமூல் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. 

அம்பதி(மேகாலயா): காங்கிரஸ் வேட்பாளர் மியானி டி ஷிரா 3,191 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவரது தந்தை மேகாலயாவின் முன்னாள் முதல்வர் முகுல் சங்மா ஆவார். மியானிக்கு போட்டியாக தேசிய மக்கள் கட்சியின் சி ஜி மொமின் இருந்தார். 

பால்ஸ் கடேகான்(மகாராஷ்டிரா): மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஸ்வஜித் கடாம் வெற்றி பெற்றுள்ளார். இவர் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ பட்டங்ராவ் கடாமின் மகன் ஆவார். இந்த தேர்தலில் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஷாகோட்(பஞ்சாப்): காங்கிரஸ் மற்றும் அகாலி தள கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஹாதேவ் சிங் லாதி வெற்றி பெற்றார். இவர் அகாலி தளம் கட்சியின் நாப் சிங் கோஹரை விட 38,801 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

செங்கண்ணூர்(கேரளா): மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஷாஜி செரியன் 20,956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதுகுறித்து அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கூறுகையில், "இந்த வெற்றி கேரள மக்களின் மனதில் உள்ள உண்மை நிலையை பிரதிபலிக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களின் மனநிலைமைக்கு ஏற்ப நடுநிலையாக செயல்பட்டு வருகிறது" என்றார்

ஆர்.ஆர்.நகர்(கர்நாடகா): கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக ஆர்.ஆர்.நகர் தொகுதிக்குட்பட்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 10,000 போலி வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் மே 15ம் தேதி நடந்த தேர்தலில், ஆர்.ஆர்.நகர் தொகுதி தேர்தல் மட்டும் மே 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக முனிரத்னா, பா.ஜ.க சார்பில் முனிராஜூ கெளடா, ம.ஜ.த வேட்பாளராக ஜி.எச்.ராமசந்திரா உள்பட 14 பேர் போட்டியினர். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதில் காங்கிரஸின் முனிரத்னா 46,593 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

வரும் நாடாளுமன்றத்தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ் அல்லாத 3வது அணியை உருவாக்குவதில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த தேர்தலில் பா.ஜ.க ஒரு சட்டப்பேரவை மற்றும் ஒரு லோக்சபா தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்றைய தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் 4 இடங்களிலும், மாநில கட்சிகள் அந்தந்த மாநிலங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close