இனி மின்னணு வாக்கு இயந்திரங்கள் தான்: தலைமை தேர்தல் ஆணையர் திட்டவட்டம்

  Newstm News Desk   | Last Modified : 03 Jun, 2018 05:40 pm

no-question-of-paper-ballots-chief-election-commissioner

சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில், மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவை அனைத்தும் எதிர்க்கட்சிகளின் போலியான குற்றச்சாட்டுகள் என்றும், இனிமேல் மின்னனு வாக்கு இயந்திரங்களில் மட்டும் தான் தேர்தல் நடக்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் தலைமை தேர்தல் அதிகாரி ஓ.பி.ராவத். 

டெல்லி, உத்தர பிரதேசம் துவங்கி, சமீபத்தில் நடைபெற்ற கர்நாடாக தேர்தல் வரை, மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மத்திய அரசின் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வரும் நிலையில், பழைய வாக்குசீட்டு முறையில் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகள் மத்தியில் வலுத்து வருகிறது. 

இந்நிலையில், இதுகுறித்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத், "மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுப்புபவர்கள் பெரும்பாலும் தோல்வியடைந்த எதிர்க்கட்சிகள் தான். அதற்கான எந்த ஆதாரமும் இதுவரை அவர்கள் தரப்பில் இருந்து சமர்பிக்கப்படவில்லை. தங்கள் குறைபாடுகளை மறைக்கவே இவ்வாறு செய்கின்றனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் இனி வரும் தேர்தல்களில் வாக்காளர்கள் தங்களது ஓட்டுக்களை சரிபார்த்துக் கொள்ளும் விவிபாட் இயந்திரங்களை பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டது. அதனால், இனி பழைய பேப்பர் பேலட் முறையை கொண்டு வரவேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை" என்றார்.

மேலும், "தேர்தலின் போது நடைபெறும் பிரச்னைகள் அல்லது முறைகேடுகள் பற்றி புகார் தெரிவிக்க மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் புகார் எழுப்பும் நபர்களின் அடையாளம் நிச்சயம் பாதுகாக்கப்படும். பொதுமக்கள் தைரியமாக புகார் தெரிவிக்கலாம். கர்நாடக தேர்தாலில் இந்த புகாரளிக்கும் முறையை சோதனை செய்தோம். அப்போது வீடியோவாகவே எங்களுக்கு 780 புகார்கள் வந்தன. இனி நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் இந்த ஆப் மூலம் புகார் தெரிவிக்கலாம்" என்றார் ராவத்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close