காலா படத்திற்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்

  Newstm News Desk   | Last Modified : 06 Jun, 2018 11:49 am

supreme-court-refuses-to-stay-release-of-rajinikanth-starrer-movie-kaala

காலா படத்திற்கு தடைகோரிய மனுவை முகாந்திரம் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா நாளை உலகமெங்கும் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை வெளியிட கூடாது என்று பல்வேறு தரப்பில் கூறி வருகின்றன. முன்னதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜசேகரன், காலா படத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கரிகாலன் என்ற தலைப்பை தான் முறையாக பதிவி செய்துள்ளேன். தற்போது காலா படம் கரிகாலன் என்ற அடைமொழியோடு வெளியாகிறது. எனவே 'காலா என்ற கரிகாலன்' திரைப்படத்துக்கு நிரந்தரமாகத் தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். ஆனால், இந்த வழக்குத் தொடர்பாக அவர் போதுமான ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை. எனவே காலா படத்துக்குத் தடை விதிக்க முடியாது எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்தத் தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜசேகரன் கடந்த மாதம் மேல்முறையீடு செய்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜசேகரன் தாக்கல் செய்த மனுவில், 'காலா' திரைப்படத்தை கரிகாலன் என்ற அடைமொழியுடன் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் வி.பார்த்திபன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், படத்தின் தலைப்பை பதிவு செய்துவிட்டு, அதனைப் புதுப்பிக்காமல் இருந்தால் அந்த தலைப்பை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள், ''காலா திரைப்படத்தை கரிகாலன் என்ற அடைமொழியுடன் வெளியிடத் தடை விதிக்க முடியாது. இந்த வழக்கை வரும் ஜூன் 7ந் தேதிக்கு முன்பாக பட்டியலிட முடியாது. இந்த மனு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ரஞ்சித், படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வரும் ஜூன் 14ந்தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்'' என உத்தரவிட்டனர்.

இதனை எதிர்த்து ராஜசேகரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, இந்த வழக்கு ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலும், வழக்கை ஏற்க முகாந்திரம் இல்லை என்று கூறியும் உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும் காலா படத்தை பார்க்க பலர் ஆவலாக உள்ள நிலையில் தற்போது அதனை எதிர்த்து ஏன் வழக்கு தொடர்ந்திருப்பதாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.