பன்முகத்தன்மை தான் இந்தியாவின் ஆன்மா: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப்!

  Newstm News Desk   | Last Modified : 08 Jun, 2018 09:56 am

soul-of-india-lives-in-pluralism-pranab-at-rss-event

பன்முகத்தன்மை தான் இந்திய நாட்டின் ஆன்மா என்று ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார். 

பல எதிர்ப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கு மத்தியில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில், "பாரத நாடு, தேசம், தேசப்பற்று குறித்த நான் புரிந்து வைத்திருப்பதை இங்கு பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று இணைந்துள்ளன. எனவே இதில் ஒன்றை பற்றி மட்டும் பேசுவது சரியாக இருக்காது" என்று கூறிவிட்டு அகராதியில் அந்த சொற்களின் பொருள் என்ன என்பதை பிரணாப் விளக்கினார். 

பின்னர், "இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. அந்த பன்முகத்தன்மைக்கு அளிக்கும் மரியாதை, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மூலமே நாம் நம்முடைய வலிமையை பெறுகிறோம். அதை நாம் பெருமையுடன் கொண்டாடி வருகிறோம்.

பல்வேறு இன, மொழி மற்றும் மதங்களை பின்பற்றும் மக்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். எனவே மக்களிடையே சகிப்புத்தன்மை மிகவும் அவசியம். சகிப்புத்தன்மை இல்லை என்றால், சர்வதேச அளவில் இந்தியாவுக்கு இருந்து வரும் தனித்துவ அடையாளம் நீர்த்துப் போய்விடும்.மத ரீதியாகவோ, சித்தாந்த ரீதியாகவோ இந்தியாவை அடையாளப்படுத்த முயன்றால் அது நாட்டுக்கு சீர்குலைவை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.

இந்தியாவை ஒரு மொழியாலோ, ஒரு மதத்தாலோ அடையாளப்படுத்திவிட முடியாது. 130 கோடி மக்கள் வாழும் இந்த தேசத்தில் 122 மொழிகள் பேசப்படுகின்றன. 1,600 வட்டார மொழி பேச்சு வழக்குகள் உள்ளன. 7 பெரிய மதங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒரே அடையாளத்தின் கீழ் இருக்கிறார்கள். இங்கே யாரும் எதிரிகள் கிடையாது.நம்மை சுற்றிலும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதை தினந்தோறும் பார்க்கிறோம். இதற்கு அவநம்பிக்கை, அச்ச உணர்வு போன்றவை முக்கிய காரணமாக இருக்கின்றன. 

பெண்களும், குழந்தைகளும் பாலியல் ரீதியிலான வன்முறை சம்பவங்களுக்கு ஆளாகும் போது இந்தியாவின் ஆன்மா மிகுந்த காயத்துக்கு உள்ளாகிறது. ஜனநாயக நாட்டில் வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்கி அனைத்து தரப்பு மக்களும் அமைதியுடன் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும்" என்றார். 

முன்னதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசுகையில், "பிரணாப் முகர்ஜியை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததை விமர்சிப்பது அர்த்தமற்ற ஒன்று. எங்கள் அமைப்பை பொறுத்தவரை இந்தியர்கள் யாரும் வெளியாட்கள் அல்ல" என்றார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close