இந்தியாவில் தனக்கு நெருக்கடி: இங்கிலாந்தில் அடைக்கலம் கோரும் நீரவ் மோடி

  Padmapriya   | Last Modified : 11 Jun, 2018 02:21 pm
nirav-modi-flees-to-uk-claiming-political-asylum

பல கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாடு தப்பிச் சென்ற வைர வியாபாரி நிரவ் மோடி, தற்போது இங்கிலாந்திடம் அடைக்கலம் கோரியுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் பிரபல வைர வியாபாரியாக இருந்தவர் நிரவ் மோடி. இவர், பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பினார். அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், நிரவ் மோடி அமெரிக்காவில் சொகுசு ஹோட்டலில் நிம்மதியாக வாழ்ந்து வருவதாகப் படத்துடன் செய்தி வெளியிட்டன வட இந்திய ஊடகங்கள். இதைத் தொடர்ந்து, அமெரிக்க அரசிடம் இதுபற்றிக் கேட்கப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில், இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் கேட்டு நிரவ் மோடி விண்ணப்பித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. அதில், இந்தியாவில் அரசியல் காரணங்களுக்காகத் தான் துன்புறுத்தப்படுவதாகவும், அதனால் தனக்கு மனித உரிமைகள் அடிப்படையில் அடைக்கலம் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். ஆனால், இது குறித்த தகவல்கள் எதையும் அந்நாட்டு உள்துறை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. நிரவ் மோடி தஞ்சம் கேட்டது உண்மையா என்று விசாரித்தபோது, "தனிநபர்கள் பற்றிய தகவல்களை வெளியிட முடியாது" என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துவிட்டது.

வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13,578 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாகச் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, நிரவ் மோடியின் வங்கி கணக்குகள், நிறுவனத்தின் சொத்துக்கள், ரொக்கப் பணம், டெபாசிட்கள், சொகுசு கார், இறக்குமதி செய்யப்பட்ட கைக்கடிகாரங்கள், வீடுகள், நிலம் எனப் பலதரப்பட்ட சொத்துக்கள் இதுவரையில் முடக்கப்பட்டன.

நிரவ் மோடி ஜனவரி மாதமே தனது குடும்பத்தினரோடு இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாடு சென்று விட்டார். அவர் அமெரிக்காவில் இருப்பதாகக் கூறப்பட்டது. தற்போது அவர் லண்டனில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடனை திருப்பிச் செலுத்தாத விஜய் மல்லையாவும் லண்டனில் தங்கியுள்ள நிலையில், நிரவ் மோடியும் இங்கிலாந்திடம் அடைக்கலம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close