14 வழக்குகள்; ஒருவரை கூட கைது செய்யமுடியவில்லை: மத்திய அரசு மீது கெஜ்ரிவால் பாய்ச்சல்

  Newstm News Desk   | Last Modified : 11 Jun, 2018 07:27 pm

14-cases-and-no-arrests-kejriwal-fires-at-centre

தனது கட்சியின் அமைச்சர்கள் மீது 14 வழக்குகளை தொடுத்துள்ள மத்திய அரசால் இதுவரை ஒருவரை கூட கைது செய்ய முடியவில்லை என ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற டெல்லி உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு பிறகு அமைதி காத்து வந்த ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால், செய்திகளர்கள் முன்னிலையில் பாரதிய ஜனதாவை இன்று கடுமையாக விமர்சித்துள்ளார். சிபிஐ மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் மத்திய அரசு 14 வழக்குகளை தனது அமைச்சர்கள் மீது சுமத்தியுள்ளதாகவும், ஆனால், இதுவரை ஒன்றில் கூட யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

"கடந்த ஒரு வருடமாக நான் அமைதியாக இருக்கிறேன் என மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், எனது அமைதியை மத்திய அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தத் துவங்கிவிட்டது. லஞ்சத்திற்கு எதிராக 1031 என்ற அவசர தொலைபேசி எண் திட்டம் கொண்டுவரப்பட்டதில் முறைகேடு என வழக்கு தொடுத்தார்கள். அதில் ஒருவரும் கைது செய்யப்படவில்லை. அமைச்சர் மனிஷ் சிசோடியா மீது விளம்பரங்கள் வழங்கியதில் ஊழல் என்ற வழக்கு போடப்பட்டது. அவரும் கைது செய்யப்படவில்லை. நான் 2 கோடி லஞ்சம் வாங்கியதாக என் கட்சியில் இருந்து சென்ற எம்.எல்.ஏ கபில் மிஸ்ரா துணைநிலை ஆளுநர் முன் குற்றம் சாட்டினார். என்னையும் யாரும் கைது செய்யவில்லை?

அனைத்து வழக்குகளும் அரசியல் காரணங்களுக்காக போடப்பட்டவை. பாரதிய ஜனதா வழக்கறிஞர்கள், அக்கட்சியின் தலைவர்கள், துணை நிலை ஆளுநர் போன்றோர் கொண்டு வந்த வழக்குகள் தான் இவை. டெல்லி அரசு செயல்படுவதை தடுக்கவே இவ்வாறு செய்கிறார்கள். எங்கள் கட்சி தொடர்ந்து பல நல்ல திட்டங்களை கொண்டு வருவது பிடிக்காமல் இவ்வாறு செய்கிறது பாரதிய ஜனதா" என்றார் கெஜ்ரிவால்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close