வாஜ்பாய் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்தார் வைகோ!

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2018 04:45 pm
vaiko-visits-ailing-vajpayee-in-aiims

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நலம் குறித்து நேரில் நலம் விசாரித்தார். 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மருத்துவப் பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது வழக்கமாக நடைபெறும் மருத்துவப் பரிசோதனை தான் என்றும், வாஜ்பாய் நலமாக இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். 

பின்னர், "வாஜ்பாய்க்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், சிறுநீர் பாதை தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது" என மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. 

இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி, அவரைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.கவின் மூத்த தலைவர் அத்வானி, பா.ஜ.க தலைவர் அமித் ஷா உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். இதன் தொடர்ச்சியாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது மகள் நமிதாவிடம் வாஜ்பாயின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும், தன்னை ஒரு மகன் போல் தான் வாஜ்பாய் பார்ப்பார் என அவரது மகள் கூறியதாக தெரிவித்தார். மேலும், "வாஜ்பாய் மதச்சார்பில்லாமல் செயல்பட்டவர். எதிர்க்கட்சிகளுக்கும், எதிர்கட்சித் தலைவர்களுக்கும் உரிய மரியாதை அளித்தவர். என்னுடைய வேண்டுகோளின்படி, நெய்வேலி அனல்மின் நிலையம் தொடர்பாக ஒரு யோசனையை அவர் கைவிட்டார்" என்றார். 

தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாஜ்பாய் விரைவில் குணமடைய வேண்டுவதாக பதிவு செய்துள்ளார். அவர், "வாஜ்பாய் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். கலைஞர் கருணாநிதி சார்பிலும், தி.மு.க சார்பிலும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close