கவிழ்ந்தது காஷ்மீர்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மெஹபூபா

  Newstm Desk   | Last Modified : 19 Jun, 2018 03:48 pm
mehbooba-mufti-sends-resignation-to-governor-after-bjp-snaps-ties-with-pdp

ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி உடனான கூட்டணியில் இருந்து பா.ஜ.க விலகியதை அடுத்து, காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காஷ்மீரில், பா.ஜ.க ஆதரவுடன் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி) ஆட்சி நடத்தி வருகிறது. முதல்வராக மெஹபூபா முஃப்தி இருந்து வருகிறார். காஷ்மீரில் தொடர்ந்து மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என்றும், எல்லையில் தலைதூக்கி ஆடும் தீவிரவாதத்தை  ஒடுக்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் பா.ஜ.க குற்றம் சாட்டி வந்தது. இந்நிலையில் பா.ஜ.க தலைவர் அமித் ஷா தலைமையில் இன்று காஷ்மீரில் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர், பி.டி.பி உடனான கூட்டணியில் இருந்து பா.ஜ.க முழுவதும் விலகுவதாக அக்கட்சியின் காஷ்மீர் மாநில தலைவர் ராம் மாதவ் அறிவித்தார். 

இதையடுத்து, பெரும்பான்மை இல்லாததால், ஆட்சி கவிழும் என்ற சூழ்நிலையில் தனது முதல்வர் பதவியை மெஹபூபா முஃப்தி ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநரிடம் அளித்துள்ளார். மேலும் இன்று மாலை 5 மணிக்கு அவர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளிக்க இருக்கிறார். 

87 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28ம், பா.ஜ.க-வுக்கு 25 எம்.எல்.ஏ-க்களும் உள்ளனர். கூட்டணி ஆட்சியில் இருந்து பா.ஜ.க விலகியுள்ளதால்  இரு கட்சிகளுக்குமே பெரும்பான்மை இல்லை.  பெரும்பான்மைக்கு 44 தொகுதிகள் தேவை என்பதால், பி.டி.பியுடன் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைக்கும் பட்சத்தில் ஆட்சியை தக்க வைக்கலாம். தேசிய மாநாட்டு கட்சி 15 தொகுதிகளையும், காங்கிரஸ் 12 தொகுதிகளையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close