எய்ம்ஸ்-க்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த மோடி! வாய்பாய் உடல்நலம் விசாரித்தார்

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2018 03:55 pm

pm-narendra-modi-reaches-aiims-without-security-meets-former-pm-atal-bihari-vajpayee-to-check-his-health

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் நேரில் சென்று விசாரித்தார். 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 11ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறுநீரக தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகிறார். வாஜ்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றைய தினமே, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.கவின் மூத்த தலைவர் அத்வானி, பா.ஜ.க தலைவர் அமித் ஷா, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர்.

தொடர்ந்து 14 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் வாஜ்பாயின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து மீண்டும் நேற்று இரவு பிரதமர் மோடி எந்த அறிவிப்பும் இல்லாமல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றார். பிரதமரின் வருகை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூட தகவல் தெரிவிக்கவில்லை. மேலும், அவரது கார் அனைத்து சிக்னல்களிலும் நின்று வந்துள்ளது. எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் அவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இரவு 9.05 மணிக்கு மருத்துவமனைக்குள் நுழைந்த பிரதமர் மோடி, வாஜ்பாயின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். மேலும், மருத்துவர்களிடம் வாஜ்பாய் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். சுமார் 20 நிமிடங்கள் வரை அங்கு இருந்த அவர் 9.25 மணிக்கு மருத்துவமனையில் இருந்து திரும்பினார்.

Advertisement:
[X] Close