போர் விமானியான டீ கடைகாரரின் மகள்!

  திஷா   | Last Modified : 25 Jun, 2018 11:22 pm

tea-seller-s-daughter-makes-it-to-indian-air-force

சமீபத்தில் இந்திய விமானப் படையின் போர் விமானிக்கான தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் இந்த தேர்வை 6 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இதில் 22 பேர் மட்டுமே போர் விமானி பணிக்குத் தேர்வாகி உள்ளனர். அவர்களில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆன்சல் கங்க்வாலும் ஒருவர்.

மத்திய பிரதேசத்தில் உள்ள, நீமுச் பேருந்து நிலையத்தில் டீ கடை நடத்தி வரும் ஆன்சலின் தந்தை சுரேஷ், “எனது மகளின் படிப்பு மற்றும் போட்டித் தேர்வுகளுக்காக கடன் வாங்கிதான் படிக்க வைத்தேன். எனது முயற்சி வீண் போகவில்லை. எனது மகள் போர் விமானி பணிக்கு தேர்வானதால் எனது டீக்கடை பிரபலமாகிவிட்டது” என்று பெருமையாக கூறுகிறார்.

இதுப்பற்றி ஆன்சல், ‘‘பள்ளி, கல்லூரி படிப்பின் போது விளையாட்டுகளில் ஆர்வமாக பங்கேற்பேன். கூடைப்பந்து, 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் பரிசுகளைப் வென்றுள்ளேன். இதற்கிடையில், கல்லூரி படிப்புக்குப் பிறகு சப்-இன்ஸ்பெக்டர் தேர்விலும் வெற்றி பெற்று பயிற்சியில் சேர்ந்தேன். ஆனால், எனது லட்சியம் போர் விமானியாக வேண்டும் என்பதே. காரணம், நான் 12-ஆம் வகுப்பு படிக்கும்போது, உத்ரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களை இராணுவத்தினர் மீட்டெடுத்த காட்சிகள் என்னை இராணுவ போர் விமானியாக சேர ஊக்கப்படுத்தியது. எனவே மிகக் கடினமாக உழைத்து இப்போது போர் விமானி பணிக்கு தேர்வு பெற்றுள்ளேன்’’ என மகிழ்ச்சி பொங்க கூறுகிறார்.

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங், உள்ளிட்ட தலைவர்களும், பிரபலங்களும் ஆன்சலுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே ஹைதராபாத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில் வரும் 30-ஆம் தேதி பணியில் சேருகிறார் ஆன்சல்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close