பென்ஸ் காருக்கும், பாலுக்கும் ஒரேமாதிரி வரியா?- காங்கிரஸ் யோசனைக்கு மோடி பதில்

  Padmapriya   | Last Modified : 01 Jul, 2018 08:22 pm
pm-rules-out-single-rate-under-gst-says-mercedes-and-milk-cannot-have-same-tax

பாலுக்கும், மெர்சடிஸ் பென்ஸ்காருக்கும் ஓரே மாதிரியான வரி சாத்தியமில்லை, அது போல காங்கிரஸ் கோரும் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக ஜி.எஸ்.டி வரியும் சாத்தியப்படாது என்று பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். 

நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்து ஓர் ஆண்டு நிறைவடைகிறது. கடந்த ஆண்டு ஜுலை 1-ம் தேதி அமலுக்கு வந்தது ஜிஎஸ்டி வரிவிதிப்பு. ஜிஎஸ்டி அறிமுகம் செய்து ஒர் ஆண்டு நிறைவையொட்டி, சுயராஜ்யம் என்ற இணையதளத்துக்குப் பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் ஜி.எஸ்.டி தொடர்பாக விரிவாக பேசியுள்ளார்.  ஜிஎஸ்டியின் சாதனை குறித்து பட்டியலிட்ட அவர், கடந்த ஓர் ஆண்டில் 48 லட்ச நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் 11 கோடி வருவாய் வரி தாக்கல் செய்யப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சிகள் கூறுவது போல ஜிஎஸ்டி கடுமையான முறையாக இருந்தால், இது சாத்தியமாகி இருக்காது என்றார். 

மேலும் அவர், "தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து வரி முறையில் வரலாற்று முக்கியத்துவமான மாற்றத்தை செய்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகம் செய்து ஓர் ஆண்டை நிறைவு செய்த நிலையில், இந்த ஒர் ஆண்டில் மறைமுக வரி செலுத்துவோர் எண்ணிக்கை 70 சதவீதம் உயர்ந்துள்ளது. 17 வரிகள், 23 கூடுதல் வரிகள் இணைக்கப்பட்டு ஒரே வரியாக மாற்றப்பட்டுள்ளன.

உற்பத்தி வரி, சேவை வரி, வாட் வரி ஆகியவை அகற்றப்பட்டு, எளிமையான மறைமுக வரி அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியமும், சோதனைச் சாவடிகளும் ஒழிக்கப்பட்டு இருக்கின்றன. 

ஜிஎஸ்டி வரியில் ஒரு மாதிரியான வரிவிதிப்பு வேண்டும் என்று காங்கிரஸ் நண்பர்கள் கேட்கின்றனர். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாலுக்கும், பணக்காரர்கள் பயன்படுத்தும் மெர்சடீஸ் பென்ஸ் காருக்கும் ஒரேமாதிரியான வரிவிதிக்க முடியுமா. அது போல தான். அவர்கள் கூறுவது சாத்தியமே இல்லை. 

ஜிஎஸ்டி வரியில் உணவுப்பொருட்கள் பலவற்றுக்கு வரி இல்லை, சில பொருட்களுக்கு 5 சதவீதமும், சில பொருட்களுக்கு 18 சதவீதமும் விதித்துள்ளோம். அனைத்து உணவுப் பொருட்களுக்கும் ஒரேமாதிரியான வரி விதிக்கவில்லை.

சுதந்திரம் பெற்றதில் இருந்து கடந்த வருடம் வரை 66 லட்சம் வரிசெலுத்துவோர்தான் இருந்தனர். ஆனால், ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து 48 லட்சம் பேர் புதிதாக இணைந்துள்ளனர்.

ஜிஎஸ்டி வரி குழப்பமானதாகத் தெரிகிறதா. இல்லவே இல்லை, தற்போது தான் தொழில் செய்வது எளிமையாகி உள்ளது. 

மாநில எல்லைகளில் வாகனங்கள் வரிசையாக நிற்கத் தேவையில்லை. லாரி ஓட்டுநர்களின் நேரம் மிச்சமாவதால், அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்., அவர்களின் வருவாயும் கூடுகிறது.  இதனால், பொருட்களை உரியநேரத்தில் கொண்டு சேர்க்க முடியும், உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

இதற்கு முன் இருந்த 17 வரிகள், 23 கூடுதல் வரிகளை இணைத்து ஒருவரியாக மாற்றி எளிமையாக்கியுள்ளோம். 400 வகையான பொருட்களின் வரியை குறைத்துள்ளோம். 150 வகையான பொருட்களுக்கு வரியை நீக்கியுள்ளோம். இதனால், அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பல பொருட்களின் விலை குறைந்துள்ளது.

ஏழைகள் பயன்படுத்தும் அரிசி, சர்க்கரை,  மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகள் வரி குறைக்கப்பட்டுள்ளன. அன்றாடம் அதிகமாக மக்கள் பயன்படுத்தும் உணவுப்பொருட்களின் வரியை 5 சதவீத வரிக்குள் கொண்டுவந்து இருக்கிறோம். 95 வகையான பொருட்களுக்கான வரியை 18 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தி இருக்கிறோம். இதுவே ஜிஎஸ்டியின் ஓர் ஆண்டு சாதனை" என்று மோடி கூறியுள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close