இன்று முதல் காவிரி ஆணைய கூட்டம்... தமிழகத்தின் கோரிக்கைகள் என்னென்ன?

  ஐஸ்வர்யா   | Last Modified : 02 Jul, 2018 08:37 am

today-the-meeting-of-the-cauvery-water-management-authority-cwma

காவிரியில் உரிய தண்ணீரைத் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென டெல்லியில் இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டத்தில் தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட இருக்கிறது.

டெல்லி சேவாபவன் அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு, காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டம் அதன் தலைவர் மசூத் ஹுசைன் தலைமையில் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில், தமிழக தரப்பில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், புதுச்சேரி அரசு தரப்பில் பொதுப்பணித்துறை செயலர் ஏ.அன்பரசு ஆகியோர் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் ஆணையத்தின் விதிகள், செயல்பாட்டு முறைகள், கூட்டங்களுக்கான நடைமுறைகள் ஆலோசிப்பது என்றும், ஆணையத்தின் வரவு, செலவு கணக்குகள், மாநிலங்களின் பொறுப்புகள் ஆகியவையும் விவாதிக்கப்படும் என்றும் அந்த கூட்டத்துக்கான அலுவல் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆணையத்துக்கு நிரந்தர அலுவலகம் அமைப்பது, ஊழியர்களை நியமிப்பது குறித்தும், காவிரி ஒழுங்காற்றுக்குழுவுக்கான வழிகாட்டு நடைமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

தமிழகத்தின் கோரிக்கைகள்

காவிரி ஆணைய கூட்டத்தில், தமிழக அரசு தரப்பில் பல்வேறு கோரிக்கைள் முன்வைக்கப்பட உள்ளன. அதில், குறிப்பாக, கர்நாடக அரசு தொடர்ந்து காவிரியில் தண்ணீர் விட ஆணையத்தில் வலியுறுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜூலை மாதம் 30 டிஎம்சியும், ஆகஸ்ட் மாதம் 50 டிஎம்சி தண்ணீரையும் காவிரியில் திறந்துவிட வலியுறுத்தப்படும் எனத் தெரிகிறது. மேலும், கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகுவது தவறு என சுட்டிக்காட்டப்படும் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் உச்சநீதிமன்ற உத்தரவுபடி தண்ணீர் தர வேண்டுமென்பதே முதல் கூட்டத்தில் தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்படும் பிரதான கோரிக்கை என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆணையம் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட இருக்கிறது.

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close